நாடு முழுவதும் 50 இலட்சம் கையொப்பங்களை சேகரிக்கும் திட்டம்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, நாராஹேன்பிட்டி அபயாராமவிற்கு இன்று சென்றிருந்தார்.

பொதுத்தேர்தலை கோரி, பெவிதி ஹன்ட அமைப்பு நாடு முழுவதும் 50 இலட்சம் கையொப்பங்களை சேகரிக்கும் திட்டத்தின் கீழ் சேகரித்த கையொப்பங்கள் அடங்கிய மகஜர் மஹிந்த ராஜபக்ஸவிடம் இன்று கையளிக்கப்பட்டது.

இதன்போது, அரசாங்கத்தின் எதிர்காலத் திட்டங்கள் தொடர்பில் ஊடகவியலாளர்கள் மஹிந்த ராஜபக்ஸவிடம் கேள்வி எழுப்பினர்.

அரசாங்கத்தின் எதிர்காலத் திட்டங்களைத் தாம் முன்னெடுத்துச் செல்வதாகவும் ஜனாதிபதியும் செயலாளர்களும் தம்முடன் உள்ளதாகவும் அதற்கமைய செயற்பாடுகள் இடம்பெறுவதாகவும் மஹிந்த ராஜபக்‌ஸ பதிலளித்தார்.

நாளைய தீர்ப்பு எவ்வாறு அமையும் என்ற கேள்விக்கு, தமது தரப்பின் கருத்துக்களை ஏற்கனவே முன்வைத்து விட்டதாகவும் நாளைய தினம் தீர்ப்பை வழங்குவார்கள் என தான் எண்ணவில்லை எனவும் அடுத்த வாரமே அறிவிப்பார்களாக இருக்கும் என்றும் கூறினார்.

தற்போது பிரதமர் ஒருவர் இல்லாத நிலையில், அரசாங்கம் எவ்வாறு முன்நோக்கிப் பயணிக்கும் என ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த மஹிந்த ராஜபக்ஸ,

பிரதமர் உள்ளார். பதவி காணப்படுகின்றது. அமைச்சர்களும் உள்ளனர். அவர்களுக்கான பதவிகளும் காணப்படுகின்றன. எனினும், சேவையாற்ற முடியாது. அந்த தீர்மானத்தை முற்றாக எதிர்க்கின்றோம். உயர் நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்துள்ளோம்.

என குறிப்பிட்டார்.

மேலும், நாட்டை ஸ்திரப்படுத்துவதற்கு தேர்தல் அவசியம் என நாட்டிலுள்ள பெரும்பாலான மக்கள் எண்ணுவதாகவும் ஐக்கிய தேசியக் கட்சி தேர்தலுக்கு பயப்படுவதாகவும் பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை உரிய நேரத்தில் நிரூபிப்பதாகவும் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்தார்.

Sharing is caring!