நாட்டின் பல பகுதிகளிலும் இன்று 100 மில்லிமீற்றருக்கும் அதிக மழைவீழ்ச்சி
நாட்டின் பல பகுதிகளிலும் இன்று(03), 100 மில்லிமீற்றருக்கும் அதிக மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
மழைபெய்யும் வேளையில் காற்றின் வேகம் அதிகரித்து காணப்படும் எனவும் அதனால், மக்களை அவதானத்துடன் செயற்படுமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் வலியுறுத்தியுள்ளது.
இதேவேளை, தலவாக்கலை – கிரேட் வெஸ்டன் லூசா தோட்டத்தில் ஏற்பட்டுள்ள மண்சரிவு அபாயம் காரணமாக சுமார் 300 பேர் இருப்பிடங்களிலிருந்து வௌியேற்றப்பட்டுள்ளனர்.
இன்று அதிகாலை ஒரு மணியளவில் இருப்பிடங்களைவிட்டு வெளியேற்றப்பட்ட இவர்கள் தோட்ட ஆலயத்திலும், சனசமூக நிலையத்திலும் தங்கவைக்கப்பட்டுள்ளதாக நியூஸ்பெஸ்ட்டின் செய்தியாளர் கூறினார்.
இந்தநிலையில், மண்சரிவு அபாயம் தொடர்பில் தாம் தொடர்ந்தும் பல்வேறு தரப்பினருக்கு முறையிட்டுள்ளபோதிலும், இதுவரையில் தமக்கான தீர்வு ஏதும் பெற்றுத் தரப்படவில்லை என பிரதேசவாசிகள் விசனம் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, மலைப்பகுதியில் வசிப்போர் மண்சரிவு தொடர்பில் அவதானத்துடன் செயற்படுமாறு இடர்முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில், இன்று பிற்பகல் 2 மணிக்கு பின்னர் அனுராதபுரம், மட்டக்களப்பு, கொழும்பு, காலி, யாழ்ப்பாணம், கண்டி, நுவரெலியா, இரத்தினபுரி, திருகோணமலை, மன்னார் ஆகிய இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.