நாட்டின் வங்கித்துறை கடந்த 6 மாதங்களுக்குள் அதிக இலாபம்

கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் நாட்டின் வங்கித்துறை கடந்த 6 மாதங்களுக்குள் அதிக இலாபத்தை ஈட்டியுள்ளது.

எனினும், நாட்டின் முன்னணி நிறுவனங்கள் கடந்த 6 மாதங்களுக்குள் குறைந்தளவில் இலாபம் ஈட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில், நாட்டின் முன்னணி வர்த்தக நிறுவனங்கள் கடந்த 6 மாதங்களில் இலாபம் ஈட்டுவதில் 25 வீதம் வீழ்ச்சியடைந்துள்ளன.

எனினும், நாட்டின் வங்கித்துறையில் பிரதான நிறுவனங்கள் 14 தொடக்கம் 20 வீதம் வரையான இலாபத்தை ஈட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உரிய பிணைதாரர்களை முன்வைக்க முடியாத பல்வேறு சிக்கல்களில் உள்ளவர்கள் மற்றும் சில வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களின் நிபந்தனைகளை பூர்த்தி செய்ய முடியாத வறிய மக்களுக்கு கடனை வழங்குதல் மற்றும் ஏனைய நிதி தேவைகளுக்காக நுண்கடன் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

எனினும், இந்தப் பிரிவில் விதி முறைகளை மீறியமை, சட்டவிரோதமான முதலீடுகளை ஏற்கின்றமை, அதிக வட்டி உள்ளிட்ட சில முறைகேடுகள் தற்போது காணப்படுகின்றன.

அநேகமான நிதி நிறுவனங்கள் மக்களுக்கு கடனை வழங்கி அதற்காக 40 தொடக்கம் 50 வரையான மிக அதிக வட்டியை அறவிடுகின்றன.

இவ்வாறு கடன் பெற்ற நாட்டில் வாழும் ஏழைப் பெண்களின் கடன் தொகையில் ஒரு இலட்சம் ரூபா வரையான கடனை இரத்து செய்வதற்கான வேலைத்திட்டத்தை கடந்த ஆகஸ்ட் மாதம் அரசாங்கம் முன்னெடுத்தது.

இலங்கையில் நுண்கடன் கட்டுப்பாடு 2016 ஆம் ஆண்டின் ஆறாம் இலக்க நுண்கடன் சட்டத்தின் ஊடாக அமுல்படுத்தப்படுகின்றது.

நுண்கடன் வர்த்தகத்தில் ஈடுபடுவோருக்கு நுண்கடன் நிறுவனத்திற்கான அனுமதிப்பத்திரத்தை மாத்திரம் விநியோகித்தல், அதனைக் கட்டுப்படுத்தல் மற்றும் கண்காணித்தல் ஆகிய விடயங்களை மத்திய வங்கியின் கீழ் முன்னெடுப்பதற்கு இந்தச் சட்டம் வழிவகுக்கின்றது.

எனினும், ஏனைய அரசசார்பற்ற நிறுவனங்கள் தன்னார்வ சமூக சேவை அமைப்புகள் உள்ளிட்ட நிதி வழங்கும் நிறுவனங்கள் 1980ஆம் ஆண்டு 31 ஆம் இலக்க தன்னார்வ சமூக சேவை அமைப்புகளுக்கான சட்டத்தின் கீழ் சமூக சேவை பதிவாளரின் கீழ் செயற்படுகின்றன.

Sharing is caring!