நான் ஒவ்வொரு இடத்திலும் கருத்துக்களை மாற்றி மாற்றி பேசுவதில்லை – மஹிந்த ராஜபக்ஷ

அரசாங்கத்திலுள்ள ஏனைய தலைவர்கள் போன்று நான் ஒவ்வொரு இடத்திலும் கருத்துக்களை மாற்றி மாற்றி பேசுவதில்லையென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

கெப்பத்திகொள்ளாவ பகுதியில் கடந்த 2006 ஆம் ஆண்டு இடம்பெற்ற பஸ் குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் நிகழ்வு இன்று (15) இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார்.

உள்நாட்டில் இருக்கும் போது இந்திய எதிர்ப்புக் கொள்கையும், இந்தியாவுக்கு சென்ற போது இந்திய ஆதரவு கொள்கையையும் வெளிப்படுத்துவதாக அரசாங்க தரப்பினரால் முன்வைக்கும் குற்றச்சாட்டு குறித்து ஊடகவியலாளர் ஒருவர் அவரிடம் வினவிய போதே இதனைக் குறிப்பிட்டார்.

இந்தியாவில் வைத்து கோட்டாபய ராஜபக்ஷவை ஜனாதிபதி வேட்பாளராக நியமிப்பது குறித்து கருத்துத் தெரிவித்திருந்தீர்கள் என ஊடகவியலாளர் ஒருவர் அவரிடம் வினவியதற்கு,

நான் தெரிவித்தது ஒன்று. ஊடகங்கள் அதனை திரிபுபடுத்திக் கூறியுள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

மஹிந்த ராஜபக்ஷ அண்மையில் நாமல் ராஜபக்ஷவுடன் இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டு அங்கு பல அரச தலைவர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இந்தியாவின் செல்வாக்கு இலங்கையில் அதிகரித்து வருகின்றது. அரசின் முக்கிய கேந்திர நிலையங்களை இந்தியாவுக்கு அரசாங்கம் விற்பனை செய்யப் போகின்றது என உள்நாட்டில் பாரிய எதிர்ப்புப் பிரச்சாரத்தை மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான கூட்டு எதிரணி முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Sharing is caring!