நாலக்க டி சில்வா, நாமல் குமாரவிற்கு வௌிநாடு செல்ல தடை

பொலிஸ் பயங்கரவாத விசாரணைப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் நாலக்க டி சில்வா மற்றும் ஊழல் ஒழிப்பு செயலணியின் நடவடிக்கை பிரிவுப் பணிப்பாளர் நாமல் குமார ஆகியோருக்கு நீதிமன்ற உத்தரவின்றி வௌிநாட்டிற்கு செல்வதற்கு, கோட்டை நீதவான் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

குறித்த உத்தரவை குடிவரவு குடியகல்வு திணைக்களத்திற்கு உடனடியாக அறிவிக்குமாறும் கோட்டை நீதவான் லங்கா ஜயரத்ன உத்தரவு பிறப்பித்துள்ளார்.

நாலக்க டி சில்வா மற்றும் நாமல் குமார ஆகியோரின் குரல் பதிவுகளைப் பெற்று, தயாரிக்கப்பட்ட அறிக்கையை குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் உப பொலிஸ் பரிசோதகர் குமாரசிங்க ஊடாக மன்றுக்கு சமர்ப்பிப்பதற்கும் நடவடிக்கை எடுக்குமாறு நீதவான் அரச இரசாயன பகுப்பாய்வாளருக்கு உத்தரவிட்டுள்ளார்.

கடந்த 5ஆம் திகதி நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவிற்கமைய, நாலக்க டி சில்வா மற்றும் நாமல் குமார ஆகியோர் இன்று (08) மன்றில் ஆஜராகினர்.

விடயங்கள் குறித்து நடைபெறும் அனைத்து விசாரணைகளுக்கும் ஒத்துழைப்பு வழங்கத் தயாராகவுள்ளதாக நாலக டி சில்வா சார்பில் ஆஜரான சட்டத்தரணி அஜித் பத்திரன சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, சதித்திட்டம் குறித்து குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ள நபர், சிரேஷ்ட பொலிஸ் அதிகாரியொருவர் என்பதால் அது குறித்த விசாரணைகளுக்குத் தடைகள் ஏற்படுவதாக நாலக டி சில்வா சார்பில் ஆஜரான சட்டத்தரணி மைத்திரி குணரட்ன மன்றில் தெரிவித்துள்ளார்.

Sharing is caring!