நாளொன்றுக்கு, 1,000 ரூபா அடிப்படை சம்பளம் வழங்குமாறு கோரி ஆர்ப்பாட்டம்

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளொன்றுக்கு, 1,000 ரூபா அடிப்படை சம்பளம் வழங்குமாறு கோரி, இன்று பதுளையில் கறுப்புச்சட்டை ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

பதுளை, வீல்ஸ் பார்க் பூங்காவில் குழுமிய தன்னெழுச்சிமிக்க இளைஞர்கள் அங்கிருந்து பதுளை, லோவர் வீதியூடாக முத்தியங்கனை ரஜமகா விகாரை அமைந்துள்ள சுற்றுவட்டத்தை சென்றடையவுள்ளனர்.

அங்கிருந்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் ஊவா மாகாண சபைக்கும் ஆளுநர் அலுவலகத்திற்கும் செல்ல திட்டமிடப்பட்டுள்ளதாக நியூஸ்பெஸ்ட்டின் செய்தியாளர் கூறினார்.

தமது உறவுகளுக்கு நாளொன்றுக்கு, 1,000 ரூபா அடிப்படை சம்பளம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி கடந்த மாதம் 24 ஆம் திகதி கொழும்பு – காலி முகத்திடலில் ஒன்றுகூடிய இளைஞர்கள் குழுவினால் பதுளையில் இன்று இந்தக் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

பதுளை நகரை அண்மித்துள்ள அனைத்து பெருந்தோட்டங்களையும் சேர்ந்த இளைஞர், யுவதிகள், தோட்டத் தொழிலாளர்கள், சமூக நலன்புரி அமைப்பின் அங்கத்தவர்கள் என பலரும் இந்த தன்னெழுச்சி இளைஞர்களின் கறுப்பு சட்டை போராட்டத்தில் கலந்துகொண்டிருந்தனர்.

Sharing is caring!