நீக்கப்பட்ட ரணில் விக்கிரமசிங்கே, பிரதமர் பதவியில் இருப்பதை அங்கீகரிப்பதாக, பார்லிமென்ட் சபாநாயகர்

இலங்கையில், அதிபர் மைத்ரிபால சிறிசேனவால், பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட ரணில் விக்கிரமசிங்கே, பிரதமர் பதவியில் இருப்பதை அங்கீகரிப்பதாக, பார்லிமென்ட் சபாநாயகர், கரு ஜெயசூர்யா கூறியுள்ளார். மேலும், விக்கிரமசிங்கேவிடம் பறிக்கப்பட்ட அதிகாரங்களை மீண்டும் வழங்கும்படி, சிறிசேனவை, ஜெயசூர்யா வலியுறுத்தியுள்ளார். இதனால், இலங்கை அரசியலில் கடும் குழப்பம் நிலவுகிறது.

இலங்கையில், 2015ல் நடந்த அதிபர் தேர்தலின் போது, யு.பி.எப்.ஏ., எனப்படும், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி வேட்பாளரான, மைத்ரிபால சிறிசேனவுக்கு, 67, ரணில் விக்கிரம சிங்கேவின், 69, யு.என்.பி., எனப்படும், ஐக்கிய தேசிய கட்சி ஆதரவு அளித்தது.தேர்தலில் வெற்றி பெற்ற, சிறிசேன, அதிபராகவும், ரணில், பிரதமராகவும் பதவியேற்றனர்.

இந்தாண்டு, இலங்கையில் நடந்த உள்ளாட்சி தேர்தலில், மகிந்த ராஜபக்சே தலைமையிலான, இலங்கை சுதந்திர முன்னணி, பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்றது. இதனால், அடுத்த பொதுத் தேர்தலில், ராஜபக்சேவின் கை ஓங்கும் நிலை உருவானது.இதையடுத்து, விக்கிரமசிங்கேவிடம் இருந்து, சிறிசேன, விலகத் துவங்கினார்.

அதன் தொடர்ச்சியாக, யு.என்.பி., உடனான கூட்டணியை முறித்துக் கொள்வதாகவும், பிரதமர் பதவியில் இருந்து ரணிலை நீக்குவதாகவும், அதிபர் சிறிசேன, சமீபத்தில் அறிவித்தார்.மேலும், முன்னாள் அதிபர் ராஜபக்சேவுடன் கூட்டணி அமைத்ததோடு, அவரை, பிரதமராகவும் நியமித்தார்.

Sharing is caring!