பன்றி இறைச்சி விற்பனைக்குஅனுமதி

பன்றி இறைச்சியைக் கொண்டு செல்வதற்கும் விற்பனை செய்வதற்கும் அனுமதி வழங்குவதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை தாக்கல் செய்வதற்கு விவசாய அமைச்சு தீர்மானித்துள்ளது.

பன்றிகளின் இனப்பெருக்கம் அதிகரித்துள்ளதால், நாட்டின் பல பகுதிகளில் பயிர்ச்செய்கைக்கு பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

இதன்காரணமாக, விவசாயிகள் பாரிய அசௌகரியங்களை எதிர்நோக்கிவருவதாகவும் அமைச்சு கூறியுள்ளது.

குறிப்பாக தெங்கு, கிழங்கு மற்றும் வாழைச்செய்கைக்கு அதிக பாதிப்புகள் ஏற்படுவதாகவும் விவசாய அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

இந்தப் பிரச்சினைகள் தொடர்பில் விவசாயிகளிடமிருந்து கிடைத்துள்ள முறைப்பாடுகளை பரிசீலனை செய்து, பன்றி இறைச்சியை விற்பனை செய்வதற்கும் கொண்டுசெல்வதற்றும் சட்ட ரீதியாக அனுமதி வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு கூறியுள்ளது.

இதற்கான அமைச்சரவைப் பத்திரம் அடுத்த வாரம் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

தற்போது காணப்படும் சட்டத்திற்கமைய காட்டுப் பகுதிகளில் பன்றிகளை வேட்டையாடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

எனினும், வீட்டுத்தோட்டம் மற்றும் பயிர்ச்செய்கை நிலங்களுக்குள் செல்லும் பன்றிகளை கொல்வதற்கு எவ்விதத் தடைகளும் இல்லை.

இந்நிலையில், பன்றி இறைச்சியைக் கொண்டுசெல்வதற்கும் விற்பனை செய்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக வனஜீவராசிகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அவ்வாறான குற்றங்களில் ஈடுபடுவோருக்கு 15,000 – 30,000 ரூபா வரையில் அபராதம் விதிக்கப்படும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Sharing is caring!