பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு பதிலாக புதிய சட்டமூலத்திற்கு எதிர்ப்பு

பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு பதிலாக கொண்டுவரப்படவுள்ள புதிய சட்டமூலத்திற்கு இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டதாக தகவல் பதிவாகியுள்ளது.

வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன புதிய சட்டமூலத்தை அமைச்சரவையில் இன்று சமர்ப்பித்த சந்தர்ப்பத்தில், உயர் கல்வி மற்றும் கலாசார அமைச்சர் கலாநிதி விஜேதாச ராஜபக்ஸ அதில் காணப்பட்ட சில முரண்பாடுகளை சுட்டிக்காட்டியுள்ளார்.

தற்போதைய சட்டத்திற்கு அமைய வாக்குமூலம் ஏற்றுக்கொள்ளப்படுகின்ற போதிலும், புதிய சட்டத்திற்கு அமைய வாக்குமூலத்தை ஏற்றுக்கொள்வதற்கு அதனை நிரூபிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், அரச பாதுகாப்பு அமைச்சிடமுள்ள சட்ட அதிகாரங்கள், சட்டம் மற்றும் ஒழுங்கு தொடர்பான அமைச்சிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமையும் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது.

எவ்வாறாயினும், இந்த திருத்தங்களுடன் சட்டமூலத்திற்கு அமைச்சரவை அனுமதி கிடைத்ததாகவும் தகவல் பதிவாகியுள்ளது.

இதேவேளை, மாலபேயில் அமைந்துள்ள இலங்கை தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின் உடன்படிக்கையை இரத்து செய்வதற்கான அமைச்சரவைப் பத்திரம் தொடர்பில் இன்று கலந்துரையாடப்பட்டுள்ளது.

இந்த சந்தர்ப்பத்தில் அமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம அதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.

அதன் பிரகாரம், சட்ட மா அதிபரின் ஆலோசனையைக் கேட்டறிந்து, அதன் பின்னர் மீண்டும் அமைச்சரவையில் சமர்ப்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் பதிவாகியுள்ளது.

Sharing is caring!