பயிர்கள் பதராகி நாசம்…கபிலநிற தத்தியின் பெருக்கம்

மட்டக்களப்பு – கிரான் கமநல சேவை பிரிவிற்குட்பட்ட பல கிராமங்களில் உள்ள விவசாய நிலங்கள் பூச்சிகளின் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.

கிரான் கமநல சேவை பிரிவிற்குட்பட்ட கிராமங்களில் 14,925 ஏக்கர் விவசாய நிலங்களில் பயிர்செய்கை இடம்பெற்று வருகின்றது. அவற்றில் 9,294 ஏக்கர் விவசாய நிலங்கள் கபில நிற தத்தி (Brown Planthopper) எனப்படும் பூச்சியின் தாக்கம் காரணமாக அழிவடைந்துள்ளதாக விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

இந்த கபில நிற தத்தி வௌ்ளாமைப் பயிர்களைத் தாக்கி பதராக மாற்றுவதாகவும் நெற்பயிர்களை பெரும்பாலும் அறுவடை காலத்திலேயே இவை தாக்குவதாகவும் விவசாயி ஒருவர் குறிப்பிட்டார்.

இந்த பூச்சி தாக்கம் காரணமாக நெல் கறுப்பு நிறத்தில் மாறுவதுடன், சோறு துவர்ப்பு சுவையைத் தருவதாக விவசாயத் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த கபில நிற தத்தி தாக்கம் காரணமாக சுமார் 2800 விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

விவசாயத் திணைக்கள அதிகாரிகள் கள பரிசோதனைகளில் ஈடுபட்டு வருவதாகவும் அரசினால் வழங்கப்படும் மானியங்களைப் பெறும் விவசாயிகளுக்கு அரசினால் காப்பீடு வழங்கப்பட்டுள்ளதாகவும் கிரான் கமநல சேவைகள் அபிவிருத்தி உத்தியோகத்தர் கோபாலப்பிள்ளை ஜெயகாந்தன் குறிப்பிட்டார்.

Sharing is caring!