பலத்த காற்று…யாழிலும் பல வீடுகள் சேதம்

மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களின் சில பகுதிகளில் 100 மில்லிமீட்டருக்கும் அதிக மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

அதிக மழை காரணமாக பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மக்களை அவதானத்துடன் செயற்படுமாறு திணைக்களம் அறிவித்துள்ளது.

யாழ்ப்பாணம் – காரைநகர், கல்லந்தாழ்வு ஐந்தாம் வட்டாரம் பகுதியில் நேற்றிரவு வீசிய கடும் காற்றினால் ஒரு வீடு முற்றாகவும் நான்கு வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.

பாதிக்கப்பட்டவர்கள் உறவினர் வீடுகளில் தங்கியுள்ளதாக  பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

இதேவேளை, நேற்றிரவு வீசிய கடும் காற்றினால் வலிகாமம் மேற்கு – பொன்னாலை பகுதியில் உள்ள மூன்று வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

மாத்தளை மாவட்டத்தின் சில பகுதிகளில் நிலவி வரும் கடும் மழை மற்றும் காற்றுடனான வானிலையால் செலகம தோட்டத்தின் 15 லயன் குடியிருப்புகளின் கூரைத்தகடுகள் வீசி எறியப்பட்டுள்ளன.

இதனால் 15 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 60 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கண்டி – யாழ்ப்பாணம் பிரதான வீதியில் பலகடுவ பகுதியில் இன்று அதிகாலை மரமொன்றின் கிளை முறிந்து வீழ்ந்ததால் அந்த வீதியூடான போக்குவரத்து சுமார் 2 மணித்தியாலங்களுக்கு ஒரு வழிப்பாதையாக மட்டுப்படுத்தப்பட்டதுடன், பின்னர் நிலைமை சீராக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கண்டி – பன்வில மாஊசா மேற்பிரிவு தோட்டத்தில் கல்லொன்று சரிந்து வீழும் அபாயம் நிலவுவதால், 9 குடும்பங்களைச் சேர்ந்த 50 பேர் மாஊசா தமிழ் வித்தியாலயத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

கண்டி – உளுகங்க பிரதான வீதியில் மரமொன்று முறிந்து வீழ்ந்துள்ளது. இதனால் குறித்த வீதியூடான போக்குவரத்து 3 மணித்தியாலங்கள் வரை தடைப்பட்டிருந்ததாக நியூஸ்ஃபெஸ்ட்டின் பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

லிந்துலை – நாகஸ்தனை, வலகா கொலனி பகுதியில் வீடுகளுக்கு முன்பாகவிருந்த மண் மேடு சரிந்து வீழ்ந்தமையால் அப்பகுதியூடான போக்குவரத்திற்கு பாதிப்பு ஏற்பட்டது.

இதேவேளை, மண்மேடு சரிந்து வீழ்ந்தமையால் மஸ்கெலியா கீழ் பிரிவிலுள்ள 6 வீடுகள் சேதமடைந்துள்ளன.

பாதிக்கப்பட்டவர்கள் அங்கிருந்து வௌியேற்றப்பட்டுள்ளனர்.

வட்டவளை நகரை அண்மித்த பகுதியில் மண்மேடு சரிந்து வீழ்ந்தமையால் ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டது.

சென் க்லாயார் பகுதியில் மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் ஹட்டன் – கண்டி வீதியின் போக்குவரத்திற்கும் பாதிப்பு ஏற்பட்டதாக நியூஸ்ஃபெஸ்ட்டின் பிராந்திய செய்தியாளர் கூறினார்.

குருநாகல் – அல்கம, உடுகம உள்ளிட்ட 7 கிராம சேவகர் பிரிவுகளை ஊடறுத்து இன்று அதிகாலை வீசிய பலத்த காற்றினால் 90-க்கும் அதிகமான வீடுகள் சேதமடைந்துள்ளன.

பன்னல, தம்பதெனிய மற்றும் மும்மான பகுதிகளில் பலத்த காற்றினால் மரங்கள் முறிந்து வீழ்ந்தமையால் சில வீடுகள் சேதமடைந்துள்ளன.

குறித்த பகுதிகளின் செய்கை நிலங்களும் பாதிக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, எஹெலியகொட – ஹேவாஹின்ன பிரதேசத்தை ஊடறுத்து இன்று வீசிய பலத்த காற்றினால், சுமார் 40 வீடுகள் சேதமடைந்துள்ளன.

நிலவும் பலத்த மழை காரணமாக சில நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.

மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் மூன்று வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் நுவரெலியா மாவட்ட காரியாலயம் தெரிவித்துள்ளது.

லக்ஷபான நீர்த்தேக்கத்தின் வான்கதவொன்றும் திறக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, பொல்கொல்ல நீர்த்தேக்கத்தின் இரண்டு வான்கதவுகளும் 3 அடி உயரம் வரை திறக்கப்பட்டுள்ளதாக கண்டி மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

மவுசாகலை நீர்த்தேக்கத்தின் மூன்று வான்கதவுகளும் திறக்கப்பட்டுள்ளன.

நீர்த்தேக்கங்களை அண்மித்த தாழ்நிலப் பகுதிகளில் வாழும் மக்களை அவதானத்துடன் செயற்படுமாறு இடர் முகாமைத்துவ நிலையம் கோரிக்கை விடுத்துள்ளது.

Sharing is caring!