பஸ் கட்டணத்தைக் குறைப்பது தொடர்பில் பேச்சுவார்த்தை

எரிபொருள் விலை மீண்டும் குறைக்கப்பட்டதை அடுத்து, பஸ் கட்டணத்தைக் குறைப்பது தொடர்பில் பஸ் சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடாத்துவதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் எம்.ஏ.பி. ஹேமசந்திர தெரிவித்துள்ளார்.

கடந்த மாதம் டீசலின் விலை 7 ரூபாவால் குறைக்கப்பட்டதுடன், கடந்த 15 ஆம் திகதி டீசலின் விலை 5 ரூபாவால் குறைக்கப்பட்டது.

அதேநேரம், நேற்று நள்ளிரவு முதல் அனைத்து வகையான டீசல் மற்றும் பெற்றோலின் விலை 5 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில், ஒரு மாதத்திற்குள் டீசலின் விலை 17 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் முதலாம் திகதி 7 ரூபாவால் டீசல் விலை குறைக்கப்பட்டதற்கு அமைய, பஸ் கட்டணம் குறைக்கப்பட்டதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், பஸ் கட்டணத்தை மேலும் குறைப்பதற்கான தேவையுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் அனைத்து தனியார் பஸ் சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடாத்தி எதிர்வரும் வாரத்திற்குள் இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என எம்.ஏ.பி. ஹேமசந்திர தெரிவித்துள்ளார்.

இதேவேளை, எரிபொருள் விலை குறைப்பிற்கு அமைய பஸ் கட்டணம் குறைக்கப்படுமா என்பது தொடர்பில் தனியார் பஸ் சங்கங்களிடம் நியூஸ்பெஸ்ட் வினவியபோது, அது தொடர்பில் பேச்சுவார்த்தை நடாத்த வேண்டும் சங்கங்களின் பிரதிநிதிகள் கூறியுள்ளனர்.

Sharing is caring!