பஸ் கட்டணத்தை 2 வீதத்தால் குறைப்பதற்கு தீர்மானம்

பஸ் கட்டணத்தை, நாளை முதல் அமுலாகும் வகையில் 2 வீதத்தால் குறைப்பதற்கு தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்துடன் நேற்று நடைபெற்ற கலந்துரையாடலின்போது, இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த முதலாம் திகதி நள்ளிரவு முதல் டீசலின் விலை 7 ரூபாவால் குறைக்கப்பட்டதை அடுத்து, அதன் பயனை பயணிகள் அடையும் வகையில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

எனினும், ஆரம்பக் கட்டணமான 12 ரூபாவில் எவ்வித மாற்றங்களும் ஏற்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த முதலாந்திகதி முதல், ஒரு லீற்றர் டீசல் 7 ரூபாவால் குறைக்கப்பட்ட நிலையில், அதன் பயனை பொதுமக்களுக்கு பெற்றுக் கொடுப்பதற்குத் தயாராகவுள்ளதாக பஸ் சங்கங்கள் தெரிவிக்கின்றன.

அதனடிப்படையில், பஸ் கட்டணங்கள் 2 வீதத்தால் குறைக்கப்படவுள்ளன.

இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில், புதிய கட்டணத் திருத்தத்திற்கமைய, 12, 15, 20, 34, 41 ரூபா கட்டணங்களில் எவ்வித மாற்றங்களும் இடம்பெறாது.

அதேநேரம் இன்று நள்ளிரவு முதல், 25, 30, 39 ரூபா கட்டணங்கள் மற்றும் 44 முதல் 67 வரையான கட்டணங்கள் ஒரு ரூபாயால் குறைக்கப்படும்.

இதற்கு மேலதிகமாக 72, 75 மற்றும் 86 ரூபாவாகக் காணப்பட்ட பஸ் கட்டணங்களும் ஒரு ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளன.

அத்துடன், 78, 81, 84 ரூபாய் கட்டணங்கள் மற்றும் 89 முதல் 114 ரூபாவாகக் காணப்பட்ட கட்டணங்களும் இன்று நள்ளிரவு முதல் 2 ரூபாவால் குறைக்கப்படவுள்ளன.

இதேவேளை, தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் கட்டணக்குறைப்புக்கு இணைவாக, இலங்கை போக்குவரத்து சபையும் பஸ் கட்டணங்களைக் குறைப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு திருத்தப்பட்ட கட்டணங்கள் தொடர்பில் இறுதித் தீர்மானம் இன்று உறுதிசெய்யப்படுமென தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் ரமல் சிறிவர்தன தெரிவித்துள்ளார்.

Sharing is caring!