பஸ் கட்டணம் 4 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது

நேற்று (20) நள்ளிரவு முதல் பஸ் கட்டணம் 4 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

எனினும், குறைந்தபட்சக் கட்டணமான 12 ரூபா கட்டணத்தில் எவ்வித மாற்றமும் இல்லை.

அரைசொகுசு பஸ்களின் கட்டணங்களும் 4 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் எம்.ஏ.பி. ஹேமசந்திர தெரிவித்தார்.

சொகுசு பஸ்களின் கட்டணம் அதிகரிக்கப்பட மாட்டாது என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, அடுத்த மாதம் முதலாம் திகதி முதல் அமுல்படுத்தப்படும் புதிய ரயில் கட்டணத் திருத்தம் வௌியிடப்பட்டுள்ளது.

இதன் பிரகாரம், ரயில் கட்டணம் 15 வீதத்தால் அதிகரிக்கப்படவுள்ளது.

புதிய கட்டணத் திருத்ததின் பிரகாரம், குறைந்தபட்சக் கட்டணமான 10 ரூபாவில் எவ்வித மாற்றமும் இல்லை என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

எனினும், குறைந்தபட்சத் தூரமான 9 கிலோமீட்டர் தூரம், 7 கிலோமீட்டராக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த 2008 ஆம் ஆண்டிலேயே இறுதியாக ரயில் கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.

இதேவேளை, ரயிலின் ஆசன முற்பதிவுக் கட்டணமும் எதிர்வரும் நவம்பர் மாதம் முதல் 20 வீதமாக அதிகரிக்கப்படவுள்ளது.

ரயில் கட்டணம் அதிகரிக்கப்படுவதை அடுத்து, ஆசன முற்பதிவுக் கட்டணத்தையும் அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

Sharing is caring!