பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான காய்நகர்த்தல்

நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியலமைப்பு சர்ச்சை நீடிக்கின்ற சூழலில் பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான காய்நகர்த்தல்களை இரு தரப்பினரும் முன்னெடுத்து வருகின்றனர்.

ஜனாதிபதியின் இந்த நடவடிக்கை காரணமாக நாட்டில் ஸ்திரமற்ற ஒரு சூழல் தோற்றுவிக்கப்பட்டுள்ளது. இந் நிலை தொடர்வது ஆரோக்கியமானதல்ல. இதற்குத் தீர்வு காணப்பட வேண்டுமானால் பாராளுமன்றம் கூட்டப்பட்டு சட்டரீதியான பிரதமர் யார் என்பதை நிரூபிக்க இடமளிக்கப்பட வேண்டும். ஜனநாயகம் பற்றி 2015 ஜனவரியில் உரத்துப் பேசிய அதே ஜனாதிபதிதான் இன்று ஜனநாயக விரோத செயற்பாடுகளில் ஈடுபடுகிறார் என்பது கவலைக்குரியதாகும்.

இதுவிடயத்தில் ஜனாதிபதி தனது கட்சி, அரசியல் நலன்களைப் புறந்தள்ளி நாட்டின் ஜனநாயகத்திற்கும் 2018 ஜனவரியில் மக்கள் வழங்கிய ஆணைக்கும் மதிப்பளிக்க வேண்டும்.

இந்த நெருக்கடியான சூழலில் அதிகாரத்தைத் தக்கவைப்பதற்கான போட்டியே நீடிக்கிறது. இந் நிலையில் முஸ்லிம் கட்சிகளின் ஆதரவைப் பெற்றுக் கொள்வதற்கான முயற்சிகளும் நடந்து வருகின்றன. முஸ்லிம் கட்சிகள் முன் மூன்று தெரிவுகள் உள்ளன.

ஒன்று ரணில் விக்ரமசிங்கவுக்கான தமது ஆதரவைத் தொடர்வது, அடுத்தது மஹிந்த ராஜபக்சவை ஆதரிப்பது, மூன்றாவது எந்தவொரு தரப்புக்கும் ஆதரவளிக்காது நடுநிலை வகிப்பது. இவற்றில் முஸ்லிம் கட்சிகள் எந்தத் தெரிவை மேற்கொள்ளப் போகின்றன என்பதே இன்று முஸ்லிம் சமூகத்தினது மாத்திரமன்றி தேசிய அரசியலில் பெரும் எதிர்பார்ப்பாகவும் உள்ளது.

இந் நிலையில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் 7 எம்.பி.க்களும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் 5 எம்.பி.க்களுமாக மொத்தம் 12 பேரை இலக்குவைத்த காய் நகர்த்தல்களை மஹிந்த அணி முடுக்கி விட்டிருக்கிறது. ஆனாலும், தமது ஆதரவு ரணில் விக்ரமசிங்கவுக்கே இருக்கும் என இவ்விரு முஸ்லிம் கட்சிகளின் தலைவர்களும் கடந்த சனிக்கிழமை அலரி மாளிகையில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்திருந்தனர். எனினும் அதன் பின்னரான காலப் பகுதியில் மேற்படி தீர்மானம் தொடர்பில் இரு முஸ்லிம் கட்சிகளும் அடிக்கடி கூடி மீள்பரிசீலனை செய்து வருவதாக தெரிகிறது.

முஸ்லிம் கட்சிகள் கடந்த காலங்களில் தமது கட்சி மற்றும் தனிப்பட்ட அரசியல் நலன்களை முன்னிறுத்தியே தீர்மானங்களை எடுத்து வந்துள்ளது வரலாறு. கடந்த ஜனாதிபதித் தேர்தலில் கூட மிகவும் இறுதிக் கட்டத்திலேயே மஹிந்த தரப்பிலிருந்து விலகி, பொது வேட்பாளரை ஆதரிக்க முன்வந்ததை நாம் அறிவோம். அந்த வகையிலும் பாராளுமன்றம் கூடி வாக்கெடுப்பு நடக்கும் கணம் வரைக்கும் முஸ்லிம் கட்சிகளின் நிலைப்பாட்டை உறுதிபடக் கூற முடியாது என்பதே நிதர்சனமாகும்.

முஸ்லிம் சமூகத்தைப் பொறுத்தவரை மஹிந்த தரப்பும் ஒன்றுதான் ரணில் தரப்பும் ஒன்றுதான். இவ்விரு தலைவர்களின் ஆட்சிக் காலத்திலுமே அளுத்கம, கிந்தோட்டை மற்றும் கண்டி வன்முறைகள் முஸ்லிம்களுக்கு எதிராக கட்டவிழ்த்துவிடப்பட்டன. முஸ்லிம் சமூகத்தின் பாதுகாப்பு விடயத்தில் யாரையும் நம்ப முடியாத நிலையே தொடர்வது துரதிஷ்டமானதாகும்.

எனினும் முஸ்லிம் கட்சிகள் முஸ்லிம் சமூகத்தின் நலன், எதிர்காலம், பாதுகாப்பு மற்றும் சமூகம் எதிர்நோக்கும் நீண்ட காலப் பிரச்சினைகளுக்கான தீர்வுகளை முன்னிறுத்தியே தீர்மானம் மேற்கொள்ள வேண்டும். மாறாக தனி நபர் மற்றும் கட்சி நலன்களை முன்வைத்து எடுக்கும் தீர்மானமானது நிச்சயம் முஸ்லிம் சமூகத்தை மேலும் இருண்ட யுகத்தில் தள்ளவே வழிவகுக்கும்.

முஸ்லிம் சமூகத்தின் நலன்களை முன்னிறுத்தி தீர்மானம் எடுக்குமாறு தேசிய சூறா சபை, முஸ்லிம் கவுன்சில் ஒப் ஸ்ரீ லங்கா என்பன மு.கா. மற்றும் அ.இ.ம.கா.வை வலியுறுத்தியுள்ளன.

Sharing is caring!