பாராளுமன்ற அமர்வு காலை 10.30இற்கு ஆரம்பமாகியது

இன்று காலை இடம்பெற்ற கட்சித்தலைவர்கள் கூட்டத்தின் பின்னர் பாராளுமன்ற அமர்வு காலை 10.30இற்கு ஆரம்பமாகியது.

இதன்போது பாராளுமன்ற தெரிவுக்குழுவிற்கு நியமிக்கப்பட்ட 12 உறுப்பினர்களின் பெயர்களை சபாநாயகர் அறிவித்தார்.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பில் தினேஸ் குணவர்தன, எஸ்.பி.திசாநாயக்க,
நிமல் சிறிபால டி சில்வா, மஹிந்த சமரசிங்க மற்றும் விமல் விரவங்ச ஆகியோரும் ஐக்கிய தேசிய முன்னணி சார்பில் லகஷ்மன் கிரியெல்ல, ரவூப் ஹக்கீம், றிசாட் பதியுதீன், மனோ கணேசன், பாட்டலி சம்பிக்க ரணவக்க ஆகியோரும் இலங்கை தமிழ் அரசுக் கட்சி சார்பில் மாவை சேனாதிரசாவும், மக்கள் விடுதலை முன்னணி சார்பில்
விஜித ஹேரத்தும் தெரிவுக்குழுவுக்கு நியமிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் குறிப்பிட்டார்.

தற்போதைய சூழ்நிலையில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு ஆளும் கட்சியாக இருப்பதனால் தெரிவுக்குழுவில் தமக்கு பெரும்பான்மை உறுப்பினர்கள் வழங்கப்பட வேண்டும்
என தினேஸ் குணவர்தன இதன்போது சபையின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.

எனினும் பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளதால்
தற்போது அரசாங்கம் ஒன்று இல்லை என்ற அடிப்படையில் இந்த கோரிக்கையை ஏற்றுக்
கொள்ள முடியாது என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க
தெரிவித்தார்.

பாராளுமன்ற தெரிவுக்குழுவில் உறுப்பினர் குழப்ப நிலை நிலவுவதால், தெரிவிக்குழுவிற்கு உறுப்பினர்களை நியமிப்பதற்கு வாக்கெடுப்பை நடத்துமாறு லக்‌ஷ்மன் கிரியெல்ல மற்றும் அனுரகுமார திஸாநாயக்க ஆகியோர் கோரிக்கை விடுத்தனர்.

இதனை தொடர்ந்து சபாநாயகரின் தீர்மானத்திற்கு அமைய இலத்திரனியல் முறையில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

தெரிவுக்குழு நியமனம் தொடர்பான சபாநாயகரின் தீர்மானத்திற்கு ஆதரவாக 121 வாக்குகள் அளிக்கப்படன.

வாக்கெடுப்பு நடைபெறும் போது ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற
உறுப்பினர்கள் சபையிலிருந்து வௌிநடப்பு செய்தனர்.

இதனைத்தொடர்ந்து பொரும்பான்மை வாக்குகளுடன் தெரிவுக்குழு நியமிக்கப்பட்டதாக சபாநாயகர் அறிவித்தார்.

இதனையடுத்து பாராளுமன்றம் எதிர்வரும் 27 ஆம் மற்றும் 29 திகதிகளில் கூடவுள்ளதாக அறிவிக்கப்பட்டது

Sharing is caring!