பாராளுமன்ற தெரிவுக்குழுவிற்கான உறுப்பினர்கள் நியமனம்

பாராளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு ஆளும் கட்சி பிரதிநிதிகள் இன்று (21) நியமிக்கப்படவுள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ மற்றும் ஆளும் கட்சியின் அமைச்சர்களுக்கிடையிலான சந்திப்பின் பின்னர் பாராளுமன்றத் தெரிவுக்குழுவுக்கான உறுப்பினர்களின் பெயர் விபரம் சபாநாயகர் அலுவலகத்தில் கையளிக்கப்படவுள்ளதாக அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

அதேநேரம், தமது கட்சியிலிருந்து தெரிவுக்குழுவுக்கு நியமிக்கப்படவுள்ளவர்கள் தொடர்பில் இன்று சபாநாயகருக்கு அறிவிக்கப்படவுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பாராளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்களும் இன்று நியமிக்கப்படவுள்ளனர்.

அனைத்துக் கட்சி உறுப்பினர்களினதும் பெயர் விபரங்கள் கிடைத்தவுடன் சபாநாயகரினால் தெரிவுக்குழு விபரம் பாராளுமன்றத்தில் அறிவிக்கப்படும் என பாராளுமன்றத்தின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் வௌ்ளிக்கிழமை, பாராளுமன்ற தெரிவுக்குழு விபரம் சபாநாயகரினால் பாராளுமன்றத்தில் அறிவிக்கப்படும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.

துறைசார் மேற்பார்வைக் குழுக்கள், அமைச்சுசார் ஆலோசனைக் குழுக்கள், சட்டவாக்க நிலையியற் குழுக்கள் மற்றும் சிறப்பு நோக்கங்களுக்கான குழுக்கள் மற்றும் விசேட குழுக்கள் என இலங்கைப் பாராளுமன்றம் 5 வகையான குழுக்களைக் கொண்டுள்ளது.

இந்தக் குழுக்களுக்கான உறுப்பினர் எண்ணிக்கை, பொறுப்பு மற்றும் கோரத்தை தீர்மானிப்பதற்கான அதிகாரம் கொண்டதாக பாராளுமன்ற தெரிவுக்குழு அமைகின்றது.

சபாநாயகரின் தலைமையில் 12 உறுப்பினர்களுடன் நியமிக்கப்படும் தெரிவுக்குழுவினால் பாராளுமன்ற நடவடிக்கைகளுக்கான 12 தெரிவுக்குழுக்களுக்கான நியமனங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

பொது முயற்சியான்மைக்கான தெரிவுக்குழு மற்றும் அரச கணக்குகள் தெரிவுக்குழுவும் இதில் அடங்குகின்றது.

Sharing is caring!