பால்மா தொடர்பில் வதந்தி….இறக்குமதி நிறுவனங்கள் வழக்கு

போட்டித்தன்மையான வர்த்தகப் பயனை நோக்காகக் கொண்டு நியூசிலாந்தில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் பாதுகாப்பு தொடர்பில் தவறான தகவல்கள் பரப்பப்படும் குற்றச்சாட்டின் கீழ் வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக பால்மா இறக்குமதி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

பெல்வத்த பால் உற்பத்தி நிறுவனம் மற்றும் ஆரியசீல டி சில்வா விக்ரமநாயக்க ஆகியோர் முறையற்ற வகையில் பயன்பெறும் நோக்கில், தவறான தகவல்களைத் தெரிவிப்பதற்கு எதிராக கொழும்பு வணிக மேல் நீதிமன்றத்தில் வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக பால்மா இறக்குமதி நிறுவனங்கள் வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Fonterra Brands Lanka, மலிபன் பால் உற்பத்தி மற்றும் டயமண்ட் பால் உற்பத்தி நிறுவனங்கள் ஒன்றிணைந்து இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளன.

இலங்கை தர நிறுவனம், இலங்கை அணு சக்தி அதிகாரி சபை , சுகாதார அமைச்சின் உணவு ஆய்வகங்கள் மற்றும் தொழிற்துறை தொழில்நுட்ப நிறுவனம் ஆகிய நிறுவனங்களால் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு தரம் மற்றும் பாதுகாப்பு தொடர்பில் அனுமதியளிக்கப்பட்ட பின்னரே இறக்குமதி செய்யப்படும் பால்மா சந்தைக்கு விநியோகிக்கப்படுவதாக குறித்த நிறுவனங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

அனைத்து பால்மா உற்பத்திகளும் சுகாதார அமைச்சின் உத்தரவுகளுக்கு அமைய, இரசாயனப் பகுப்பாய்வு அறிக்கைகளுடன் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படுவதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், இறக்குமதி செய்யப்படும் அனைத்து பால்மா உற்பத்திகளினதும் தரம் மற்றும் பாதுகாப்பு நியூசிலாந்து ஆரம்ப கைத்தொழில் அமைச்சின் சுகாதார அறிக்கையின் ஊடாக உறுதிப்படுத்தப்படுவதுடன், பால் அல்லாத கொழுப்பு பதார்த்தங்களோ ஏனைய எண்ணெய் வகைகளோ கலக்கப்படவில்லை என்பது அதன் ஊடாக உறுதி செய்யப்படுவதாகவும் பால்மா இறக்குமதி நிறுவனங்கள் தமது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளன.

Sharing is caring!