பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்தியாவிற்கு சென்று எதனை முன்னெடுக்கவுள்ளார்?

பிரதமர் ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் 19 மற்றும் 20 ஆம் திகதிகளில் இந்தியாவிற்கான விஜயத்தில் ஈடுபடவுள்ளார்.

இந்த விஜயத்தின் போது இலங்கை பிரதமர், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துக் கலந்துரையாடவுள்ளதாக ‘த ஹிந்து’ இன்று செய்தி வெளியிட்டிருந்தது.

மத்தளை விமான நிலையம், பலாலி விமான நிலையம், திருகோணமலை எண்ணெய்த் தாங்கி தொகுதி, கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு நுழைவாயில் மற்றும் கெரவலப்பிட்டிய திரவ வாயு நிலையம் ஆகியன இந்தியா முன்னுரிமை வழங்கும் திட்டங்கள் என ‘த ஹிந்து’ செய்தி வெளியிட்டுள்ளது.

இருதரப்பு பேச்சுவார்த்தைகள் மற்றும் அபிவிருத்தி ஒத்துழைப்பு தொடர்பான கூட்டு ஒப்பந்தம் காணப்பட்டாலும், எந்தவொரு திட்டமும் இந்தியா திட்டமிட்டவாறு நடைமுறைப்படுத்தப்படவில்லை என அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த சில மாதங்களில் மத்தளை விமான நிலையம் தொடர்பில் புதுடெல்லி மற்றும் கொழும்பிற்கு இடையில் வேறுபட்ட கருத்துக்கள் பரிமாறப்பட்டதாகவும், இந்தப் பின்னணியில் திட்டம் யதார்த்தமடையுமா என்பதில் சந்தேகம் நிலவுவதாகவும் ஹிந்து செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த தாமதத்திற்குக் காரணம் அரசியல் பிரச்சினை மற்றும் அதிகாரிகளின் நடவடிக்கைகளே என கொழும்பிலுள்ள உயர் அதிகாரிகள் கூறியதாக பெயரை மேற்கோள் காட்டாது தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலவும் பிரச்சினைகளைத் தீர்த்து இந்தத் திட்டத்தை பேச்சுவார்த்தையூடாக விரைவில் முன்னெடுக்க முடியும் எனவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் இந்த அவசர இந்திய விஜயத்தின் நோக்கம் என்ன?

இந்தியா விரும்பும் திட்டத்தை விரைவில் நடைமுறைப்படுத்துவதற்கான இணக்கப்பாட்டை ஏற்படுத்துவது இந்த விஜயத்தின் நோக்கம் என்பது ‘த ஹிந்து’ வெளியிட்டுள்ள செய்தியூடாக புலப்படுகிறது.

இணக்கம், வாக்குறுதி அல்லது உடன்படிக்கைகளை ஏற்படுத்துவதற்கு பிரதமருக்குள்ள அதிகாரம் என்ன?

அவர் அரச தலைவர் அல்ல. அவர் அமைச்சரவையினதோ அல்லது அரசாங்கத்தினதோ தலைவரும் அல்ல.

ரணில் விக்ரமசிங்க, பிரதமர் பதவிக்கு மேலதிகமாக அரச கொள்கை வகுப்பு மற்றும் பொருளாதார விவகார அமைச்சுப் பதவியை வகிக்கிறார்.

நாட்டிற்காக மற்றுமொரு நாட்டுடன் ஒப்பந்தத்தை ஏற்படுத்துவதற்கு அவருக்கு எந்தவொரு அதிகாரமும் இல்லை.

நாட்டு மக்கள் அல்லது குறைந்தபட்சம் ஜனாதிபதி தலைமைதாங்கும் அமைச்சரவையினால் அவருக்கு அந்த அதிகாரம் வழங்கப்படவில்லை.

அனைத்து சந்தர்ப்பங்களிலும் நிலவும் நடைமுறையை மாற்றியமைத்து, அவருக்குத் தேவையானதை முன்னெடுக்கும் விதம், ரணில் விக்ரமசிங்கவின் நடவடிக்கைகளை உற்றுநோக்கும்போது புலனாகிறது.

ரணில் விக்ரமசிங்க நடைமுறையை மாற்றியமைத்து முன்னெடுத்த பெரும்பாலான வேலைத்திட்டங்கள் ஊழல் அல்லது மோசடியினால் தோல்வியடைந்தன.

2015ஆம் ஆண்டில் நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வரும் வரை, நிதி அமைச்சின் கீழிருந்த மத்திய வங்கி பின்னர் உடனடியாக பிரதமரின் கீழ் கொண்டுவரப்பட்டது.

ஜனாதிபதி மற்றும் அமைச்சரவையின் பெரும்பாலானவர்களின் எதிர்ப்பிற்கு மத்தியில் தமது நண்பரான அர்ஜூன் மகேந்திரனை மத்திய வங்கியின் ஆளுநராக ரணில் விக்ரமசிங்க நியமித்தார்.

மகேந்திரன் நியமிக்கப்பட்டு சில வாரங்களில், முறிகள் விநியோக நடைமுறை பிரதமரின் எண்ணத்திற்கேற்ப மாற்றியமைக்கப்பட்டு, மத்திய வங்கியில் முறிகள் மோசடி இடம்பெற்றது.

விலைமனு முறைமைக்கு அமைய முறிகளை விநியோகிக்குமாறு விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சர் என்ற வகையில் பிரதமர் ஆலோசனை வழங்கினார்.

குறைந்தபட்சம் மத்திய வங்கியின் நிதிச்சபையிடமேனும் வினவாது பிரதமர் இந்த ஆலோசனையை வழங்கினார்.

2015 மற்றும் 2016ஆம் ஆண்டுகளில் இரண்டு சந்தர்ப்பங்களில் மத்திய வங்கி முறிகள் மோசடிக்கு இதனூடாக வழியேற்படுத்தப்பட்டது.

இதனுடன் நின்றுவிடாத பிரதமர், நடைமுறைக்கு மாறாக, அமைச்சரவையின் சில அமைச்சர்கள் மற்றும் அவருக்கு நெருங்கிய அதிகாரிகளை உள்ளடக்கி பொருளாதார முகாமைத்துவ அமைச்சரவை உபகுழுவை நியமித்தார்.

அனைத்து பாரிய வேலைத்திட்ட பிரேரணைகளும் இந்த உபகுழுவூடாக அமைச்சரவைக்கு முன்வைக்கப்பட்டு அதனூடாக நாட்டிற்கு ஏற்பட்ட பாரிய அழிவை எடுத்துக்கூறுவதற்கு, ஸ்ரீ லங்கன் நிறுவனத்திற்கு ஏற்பட்ட நிலைமை போதுமானது.

தமது நண்பரான அமைச்சர் மலிக் சமரவிக்ரமவைப் பயப்படுத்தி சிங்கப்பூருடன் கைச்சாத்திடப்பட்ட சுதந்திர வர்த்தக உடன்படிக்கை, நடைமுறையை மாற்றியமைத்து எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கான மற்றுமொரு உதாரணமாகும்.

இந்த உடன்படிக்கை தொடர்பில் நாட்டு மக்கள் தெளிவுபடுத்தப்படவில்லை என்பதை இறுதியில் அமைச்சர் மலிக் சமரவிக்ரமவே ஏற்றுக்கொண்டார்.

நடைமுறையை மாற்றியமைத்து, நாட்டிற்கு பாதகமான தீர்மானங்களை எடுப்பதற்கு ஆர்வம் காட்டும் பிரதமர், தற்போது இந்தியாவிற்கு சென்று எதனை முன்னெடுக்கவுள்ளார்?

Sharing is caring!