புதிய அமைச்சரவைக்குரிய பொறுப்புக்கள் – விசேட வர்த்தமானி

புதிய அமைச்சரவைக்குரிய பொறுப்புக்கள் தொடர்பான விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த வர்த்தமானி அறிவித்தலில் ஒவ்வொரு அமைச்சின் கீழும் செயற்படும் திணைக்களங்கள், அரச கூட்டுத்தாபனங்கள் என்பன வரையறுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

புதிய திருத்தத்தின்படி, இலங்கை ஔிபரப்பு கூட்டுத்தாபனம், சுயாதீன தொலைக்காட்சி சேவை, லேக்ஹவுஸ் நிறுவனம் மற்றும் இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம் ஆகிய அரச ஊடகங்கள் தொடர்ந்தும் வெகுஜன ஊடக அமைச்சின் கீழ் காணப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், சட்டம் ஒழுங்கு அமைச்சிடம் காணப்பட்ட பொலிஸ் திணைக்களம் தொடர்ந்தும் ஜனாதிபதியிடம் உள்ள பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. அரசாங்க அச்சுத் திணைக்களமும் ஜனாதிபதியின் பொறுப்பின் கீழ் எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

ஜனாதிபதி கொலை சதி விசாரணைகள் நிறைவடையும் வரையில் ஜனாதிபதியிடம் பொலிஸ் திணைக்களம் காணப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

இதேவேளை, அரச ஊடக நிறுவனங்கள் சிலவற்றையும் ஜனாதிபதி தனது அமைச்சொன்றின் கீழ் எடுத்துக் கொள்ளவுள்ளதாகவும் ஏற்கனவே கூறப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Sharing is caring!