புதிய உறுப்பினர்களை நியமிக்கவுள்ளதாக பாராளுமன்ற பிரதிப் பொது செயலாளர் நீல் இத்தவெல தெரிவித்துள்ளார்
எதிர்வரும் வாரங்களில் அரசியலமைப்புச் சபையில் புதிய உறுப்பினர்களை நியமிக்கவுள்ளதாக பாராளுமன்ற பிரதிப் பொது செயலாளர் நீல் இத்தவெல தெரிவித்துள்ளார்.
சபையின் 5 உறுப்பினர்களின் பதவிக்காலம் நேற்றுடன் நிறைவடைந்ததையடுத்து, புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்படவுள்ளனர்.
இந்தவகையில், டபிள்யூ.டி.ஜே. செனவிரத்ன, விஜித ஹேரத், திலக் மாரப்பன, ஷிப்லி அஷிஸ் மற்றும் ரதிகா குமாரசுவாமி ஆகியோரின் பதவிக்காலம் நிறைவடைந்துள்ளது.
அரசியலமைப்புச் சபையில் பிரதமர், சபாநாயகர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோர் உறுப்பினர்களாக உள்ளதுடன், மேலும் 6 பேர் உறுப்பினர்களாக அங்கம் வகிக்கின்றனர்.
சபை உறுப்பினர்களில் ஐவரின் பதவிக்காலம் நிறைவடைந்ததுடன், அண்மையில் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட மஹிந்த சமரசிங்கவின் பதவிக்காலம் நிறைவடையவில்லை எனவும் பாராளுமன்ற பொது செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.
பதவிக்காலம் நிறைவடைந்த உறுப்பினர்களுக்குப் பதிலாக புதிய உறுப்பினர்களை நியமிக்கும் பணிகள் பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவரினால் மேற்கொள்ளப்படல் வேண்டும்.
இதுவரை உறுப்பினர்களாக பதவி வகித்தவர்களால் மீண்டும் அரசியலமைப்புச் சபையில் அங்கம் வகிக்க முடியாது எனவும் நீல் இத்தவெல இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆணைக் குழுக்களுக்கு உறுப்பினர்களை நியமித்தல், அரச பணிகளில் உயர் பதவிகளுக்கான அதிகாரிகளை நியமித்தல் ஆகியன அரசியலமைப்புச் சபையின் கடமைகளாகவுள்ளன.