புதிய ஜனாதிபதி…விரைவில் பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி பதவியேற்பார்…பசில்
மாத்தறை – எலியகந்த பிரதேசத்தில் 6 கோடி ரூபா பெறுமதியான காணியை கொள்வனவு செய்தமை தொடர்பில் பொலிஸ் நிதி குற்றப்பிரிவினர் தாக்கல் செய்திருந்த வழக்கு மாத்தறை நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
மாத்தறை பிரதம நீதவான் விடுமுறை பெற்றுள்ளமையால், பதில் நீதவானிடம் வழக்கு விசாரணை அனுப்பப்பட்டிருந்ததுடன், அவர் மேலதிக நீதவானிடம் வழக்கு விசாரணையை ஒப்படைத்துள்ளார்.
அதற்கமைய, மாத்தறை மேலதிக நீதவான் கங்கா ராஜபக்ஸ முன்னிலையில் வழக்கு விசாரிக்கப்பட்டது.
நாட்டை விட்டு வௌியேறுவதற்கு வழக்கின் இரண்டாவது பிரதிவாதியான முதித ஜயக்கொடி இதன்போது கோரிக்கை விடுத்ததுடன், அவருக்கு இரண்டு வாரகால அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஜூன் மாதம் 19 ஆம் திகதி வரை வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
விசாரணைக்காக வருகை தந்த முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஸ, டிசம்பர் மாதம் 9 ஆம் திகதி பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி பதவிப்பிரமாணம் செய்ததன் பின்னர், நாட்டின் 36 ஆயிரம் கிராமங்கள் தழுவிய அபிவிருத்தித் திட்டமொன்றைத் தயாரித்து 50 இலட்சம் குடும்பங்களின் பொருளாதார நிலையை மேம்படுத்தவுள்ளதாகக் குறிப்பிட்டார்.