புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்சவை உடனடியாக நியமிக்க வேண்டும்

நல்லாட்சி அரசாங்கத்தின் ஒப்பந்தத்தை கைவிட்டு, நாட்டின் புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்சவை உடனடியாக நியமிக்க வேண்டும் என கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று(திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

“இந்த நாட்டின் அரசியலில் தற்போது பாரிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனக்கு தெரிந்தவரையில் அரசாங்கம் வெகுவிரைவில் கவிழப்போகும் நிலைமையிலேயே காணப்படுகிறது.

இதனால், ஜனநாயக விரோத செயற்பாடுகளில் அரசாங்கம் ஈடுபட்டு வருகிறது. நாளுக்கு நாள் அரசாங்கத்தின் செயற்பாட்டால் நாடும், நாட்டு மக்களும் பாரிய பாதிப்புக்களுக்கு உள்ளாகி வருகிறார்கள்.

மத்திய வங்கியில் கொள்ளையடித்துவிட்டு, பிரதானக் கொள்ளைக்காரர் சிங்கப்பூரில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருகிறார். அவர் தொடர்பில் பொலிஸார் எந்தவித நடவடிக்கையையும் எடுக்கவில்லை. இவ்வாறு குற்றவாளியொருவரை காப்பாற்றும் ஒரு அரசாங்கத்தின் ஆட்சியிலேயே நாம் இன்று வாழ்ந்து வருகிறோம்.

மேலும், ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையில் கருத்து மோதல்கள் இடம்பெறுகின்றமையையும் அனைவரும் அறிவார்கள். இவர்களின் கொள்கைகள், கருத்துக்கள், செயற்பாடுகள் என அனைத்தும் ஒன்றுக்கொன்று வித்தியாசமாக இருக்கிறது.

இந்தநிலையில், மஹிந்த ராஜபக்சவை இந்த நாட்டின் அடுத்த தலைவராக இந்தியா முழுமையாக ஏற்றுக்கொண்டுள்ளது. அவருக்கு இந்தியாவில் அரச தலைவர்களுக்கான மரியாதையே வழங்கப்பட்டது. கருத்துக் கணிப்புக்களும் அவரே அடுத்தத் தலைவர் என சுட்டிக்காட்டியுள்ளன.

இவ்வாறான நிலையில், மஹிந்தவை உடனடியாக பிரதமராக நியமிக்க வேண்டும் என நாம் வலியுறுத்துகிறோம். அதாவது, நல்லாட்சி அரசாங்கத்தின் ஒப்பந்தத்தை உடனடியாக இரத்து செய்தால், அரசாங்கமே இருக்காது.

இதனால், நாட்டில் புதிய பிரதமர் ஒருவரை நியமித்தே ஆகவேண்டிய நிலைமை ஏற்படும். இதற்கு, உடனடியாக மஹிந்த ராஜபக்சவை பிரதமராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமிக்க வேண்டும் என்பதுதான் எமது நிலைப்பாடாகும்“ என தெரிவித்துள்ளார்.

Sharing is caring!