புதுவருடக் கொண்டாட்ட நிகழ்வுகளில் எதிர் கட்சித் தலைவர் இராஜவரோதயம் சம்பந்தனும் கலந்து கொண்டுள்ளார்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்ற புதுவருடக் கொண்டாட்ட நிகழ்வுகளில் எதிர் கட்சித் தலைவர் இராஜவரோதயம் சம்பந்தனும் கலந்து கொண்டுள்ளார்.

கொழும்பு மஹகமசேக்கர மாவத்தையில் உள்ள ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இன்று இடம்பெற்ற சிங்கள, தமிழ் புத்தாண்டு பாரம்பரிய நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டன.

இதில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஜனாதிபதியின் பாரியார் ஜயந்தி சிறிசேன உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களுடன் இணைந்து சுப நேரத்தில் அடுப்பு நெருப்பு மூட்டி புத்தாண்டு சம்பிரதாயங்களில் ஈடுபட்டார்.

பணிகளைத் தொடங்கும் பாரம்பரியங்களுக்கேற்ப ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்ல வளாகத்தில் வில்வ மரக்கன்று ஒன்றை நாட்டிய ஜனாதிபதி கைவிசேட சம்பிரதாய நிகழ்விலும் கலந்து கொண்டார்.

இந்நிகழ்வில் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் கலந்து கொண்டிருந்தனர். அவர்களோடு எதிர் கட்சி தலைவர் இராஜவரோதயம் சம்பந்தனும் கலந்து கொண்டிருக்கிறார்கள்.

கொழும்பு அரசியல் பரபரப்பான சூழ்நிலையில், எதிர் கட்சி தலைவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களை கூட்டு எதிர்க் கட்சியினர் முன்வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

நாட்டில் எதிர் கட்சி தலைவர் யார் என்றே தெரியவில்லை என்று பகிரங்கமாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

அரசாங்கம் செய்யும் தவறுகளுக்கு எல்லாம் எதிர் கட்சி தலைவராக இருந்து கொண்டு எந்த விமர்சனங்களையும் தெரிவிக்காமல் சம்பந்தன் அரசாங்கத்திற்கு ஆதரவு கொடுத்துக் கொண்டிருக்கிறார் என்று பகிரங்க குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருக்கிறது மகிந்த அணி.

முன்னதாக நாடாளுமன்றத்தில் பிரதமருக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணையில் சம்பந்தன் தலைமையிலான கூட்டமைப்பினர் பிரதமருக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

இதனையடுத்து கடும் கோபமடைந்த கூட்டு எதிர்க்கட்சியினர் கடும் கண்டனங்களையும் விமர்சனங்களையும் முன்வைத்து சம்பந்தனை சாடியிருந்தனர்.

இந்த அரசியல் பரபரப்பான சூழ்நிலையில் சம்பந்தன் இன்று ஜனாதிபதியின் உத்தியோகிபூர்வ இல்லத்தில் இடம்பெற்ற வருடக் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Sharing is caring!