புற்றுநோய் அதிகரிப்பை விழிப்புணர்வால் தவிர்ப்போம் -வைத்திய கலாநிதி கிரிசாந்தி இராஜசூரியர்

-வைத்திய கலாநிதி கிரிசாந்தி இராஜசூரியர்
புற்றுநோய் வைத்திய நிபுணர் தெல்லிப்பழை-

மருத்துவ உலகில் விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அபிவிருத்தியானது மனிதனது ஆயுள் எதிர் பார்ப்பில் அதிகளவு நீட்சியை ஏற்படுத்தியிருப்பினும் தற்காலத்தில் உயிர்க்கொல்லி நோய்களுடனான மனிதனது போராட்டங்கள் அதிகரித்து வரும் போக்கையே காணக்கூடியதாகவுள்ளது.

இத்தகைய உயிர்க்கொல்லி நோய்களில் புற்றுநோயானது முக்கியமான ஒன்றாக காணப்படுவதுடன், இந்நோய்த்தாக்கமானது உலகெங்கும் பல்வேறு வயதுப் பிரிவினரிடையே அதிகரித்து வரும் போக்கை அவதானிக்கலாம்.

இலங்கை இதற்கு விதிவிலக்கானதல்ல. புற்று நோயானது அண்மைக்கால வரலாற்றைக் கொண்ட ஒரு நோயல்ல. இது கி.மு 2250 களில் காணப்பட்டிருப்பதற்கான அடையாளங்கள் எகிப்திய பிரமிட்டுக்களிலிருந்து எடுக்கப்பட்ட மனித உடல்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளிலிருந்து வெளியாகியுள்ளது. புற்றுநோய் எவ்வயது பிரிவினரையும் தாக்கலாம். எத்தகைய வாழ்க்கைத்தர நிலையிலுள்ளவர்களையும் தாக்கலாம். ஆயினும் புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வின்மையே இந்நோய்த்தாக்கத்திற்கான அதிகரித்துவரும் இறப்புக்களுக்குக் காரணமாக அமைகின்றது. இத்தகைய விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்துவது இன்றைய நிலையில் மிகவும் முக்கியமானது.

புற்றுநோய் ஏற்படுவதற்கு பல்வேறு காரணிகள் காரணமாக அமையலாம். இக்காரணிகளை பௌதீக (Physical) இரசாயன (Chemical) உயிரியல் (Biological) மற்றும் பரம்பரை அலகு (Genetic) காரணிகள் என வகைப்படுத்துவர்.
பௌதீக காரணிகளில் சூரியக்கதிர்கள் மற்றும் UV கதிர்களிலான தாக்கம் முக்கியமானது. இரசாயன காரணிகளில் சிகரெட், பீடி, சுருட்டு முதலானவற்றிலுள்ள நச்சுப்பதார்த்தங்கள், மதுபானம், வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு, புகையிலை முதலானவை முக்கியமானவை.

உயிரியல் காரணிகளில் Human Papillomo virus (HPV) வைரஸ்கள் மற்றும் எப்ஸ்டீ ன் பார் வைரஸ் (Ebstain Bra Virus) எயிட்ஸ் வைரஸ் (HIV) போன்ற வைரஸ்களின் தாக்கம் முக்கியமானது. இவற்றில் HPV வைரஸானது கர்ப்பப்பை கழுத்து புற்றுநோய்க்குக் காரணமாக அமைவதுடன் இவ்வைரஸுக்கள் முறைகேடான பாலியல் தொடர்புகளினால் கடத்தப்படுகின்றன. புற்றுநோய்களை ஏற்படுத்தும் காரணிகளில் சில மனிதனால் கட்டுப்படுத்தக்கூடியனவாகவும். சில கட்டுப்படுத்த முடியாதனவாகவும் காணப்படுகின்றன. கட்டுப்படுத்தக்கூடிய சில காரணிகளாகப் பின்வருவனவற்றைக் கருதலாம்.
(மிகுதி நாளை)

Sharing is caring!