புலம்பெயர் வர்த்தகரை 275 மில்லியன் ரூபாய் ஏமாற்றிய வழக்கு! கொழும்பில் இன்று மீண்டும் விசாரணை!

புலம்பெயர் தமிழ் வர்த்தகர் ஒருவரை 275 மில்லியன் ரூபாவுக்கு ஏமாற்றினார்கள் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ள பிரபல கொழும்பு வர்த்தகருக்கு எதிரான பயணத்தடையை கொழும்பு நீதிமன்றம் இன்று மேலும் நீடித்துள்ளது.

Blue Ocean Breeze மற்றும் Blue Ocean Realty என்ற நவீன கட்டிட நிர்மாண நிறுவனங்கள் தன்னை 275 மில்லியன் ரூபாய் மோசடி செய்துவிட்டார்கள் என்று, பிரித்தானியாவைத் தளமாகக் கொண்ட பிரபல தமிழ் வர்த்தகர் ஒருவர் சிறிலங்கா நீதிமன்றத்தில் வழக்குத்தாக்கல் செய்திருந்தார்.

275 மில்லியன் ரூபா பெறுமதியான கட்டிடங்களை நிர்மாணித்து உரிய நேரத்தில் கையளிக்கத் தவறியதை அடுத்து Blue Ocean நிறுவன உரிமையாளர்களான சிவராஜா துமிலன் மற்றும் சிவராஜா துலானி போன்றவர்களுக்கு எதிராக இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
கடந்த ஜுலை மாதம் 14ம் திகதி கொழும்பு கல்கிசை நீதவான் நீதிமன்றில் நடைபெற்ற விசாரணையைத் தொடர்ந்து, Blue Ocean நிறுவன உரிமையாளர்களான சிவராஜா துமிலன் மற்றும் சிவராஜா துலானி போன்றவர்களுக்கு எதிராக பயணத்தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

இன்று 15.09.2020 மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, இணக்கம் காணப்பட்ட உடன்படிக்கைகளுக்கு அமைய Blue Ocean நிறுவணத்தின் உரிமையாளர்களான இருவரையும் கடும் நிபந்தனைகளுடன் கூடிய பிணையில் விடுதலை செய்வதற்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

அடுத்த வருடம் செப்டெம்பர் மாதத்திற்கு முன்னதாக இந்த கட்டிடங்களை நிர்மாணித்துக்கொடுக்கவேண்டும் என்று இணக்கம் காணப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அத்தோடு, அவர்கள் இருவருக்கெதிரான வெளிநாடுகளுக்கான பயணத்தடையும் நீடிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் டிசம்பர் மாதம் 17ம் திகதி இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

இலங்கையில் முதலீடுகள் செய்யவிளையும் பல புலம்பெயர் வர்த்தகர்களை இலங்கையிலுள்ள சில வர்த்தகர்கள் தொடர்ந்து ஏமாற்றிவருவது குறிப்பிடத்தக்கது.

Sharing is caring!