பூர்வீகக்காணிகளை விடுவிக்க வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்கள் இன்று விசேட கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

முல்லைத்தீவு – கேப்பாப்பிலவில் தமது பூர்வீகக்காணிகளை விடுவிக்க வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்கள் இன்று விசேட கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கேப்பாப்பிலவில் காணிகளை விடுவிக்க வலியுறுத்தும் போராட்டம் நேற்றுடன் 500 ஆவது நாளை எட்டியதை முன்னிட்டு இன்று கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

தொடர் போராட்டம் இடம்பெற்று வரும் மக்களின் பூர்வீகக்காணிகளை அண்மித்த பகுதியில் ஆர்ப்பாட்டம் வலுப்பெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அரசியல்வாதிகளுக்கு அழைப்பு விடுக்கப்படாத போதிலும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா மக்களுடன் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டார்.

கரைத்துறைப்பற்று பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் பிரதித் தவிசாளர் ஆகியோரும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றிருந்தனர்.

Sharing is caring!