போதைப்பொருள் ஒழிப்பிற்காக தொழில்நுட்ப உத்தி

போதைப்பொருள் ஒழிப்பிற்காக சிங்கப்பூர் அரசாங்கம் பயன்படுத்தும் நிபுணத்துவ மற்றும் தொழில்நுட்ப உத்திகளை இலங்கையில் அறிமுகப்படுத்த அந்நாட்டு அதிகாரிகள் இணக்கம் தெரிவித்துள்ளனர்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சிங்கப்பூர் விஜயத்தின் போது இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.

இரண்டு நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு சிங்கப்பூர் சென்றுள்ள ஜனாதிபதி, இன்று அந்நாட்டு சமூக மற்றும் குடும்ப அபிவிருத்தி அமைச்சர் டெஸ்மன்ட் லீ மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் அதிகாரிகளை சந்தித்தார்.

இன்று முற்பகல் இடம்பெற்ற இந்த சந்திப்பில் இலங்கையில் போதைப்பொருள் ஒழிப்பிற்கு உதவிகளை வழங்குமாறு ஜனாதிபதி விடுத்த வேண்டுகோளுக்கு சாதகமான பதில் கிடைத்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

போதைப்பொருள் ஒழிப்பிற்காக இலங்கை முன்னெடுக்கும் திட்டங்களுக்கு சிங்கப்பூரின் ஒத்துழைப்பை வழங்குவது தொடர்பில் ஆராய்வதற்காக விரைவில் அந்நாட்டு பிரதிநிதிகள் குழு இலங்கைக்கு வருகை தரவுள்ளது.

சிங்கப்பூர் அரசாங்கம் போதைப்பொருள் ஒழிப்பிற்காக தேசிய மட்டத்தில் நடைமுறைப்படுத்தியுள்ள திட்டங்களின் முன்னேற்றம் தொடர்பாகவும் ஜனாதிபதிக்கு விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

இலங்கையிலும் தேசிய மட்டத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ள போதைப்பொருள் ஒழிப்புத் திட்டங்கள் தொடர்பில் இதன்போது ஜனாதிபதி விளக்கமளித்துள்ளார்.

இந்த நடவடிக்கையில் அர்ப்பணிப்புடன் செயற்படுகின்ற பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு விரைவில் விருது வழங்கி கௌரவிக்கவுள்ளதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

Sharing is caring!