போதைப்பொருள் வர்த்தகத்திலும் ஈடுபட்ட 6 கைதிகளை வேறு சிறைக்கூடத்திற்கு மாற்றம்

திட்டமிட்ட குற்றச்செயல்களிலும் பாரிய போதைப்பொருள் வர்த்தகத்திலும் ஈடுபட்ட 6 கைதிகளை வேறு சிறைக்கூடத்திற்கு மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது.

வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள குறித்த கைதிகள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்தது.

6 கைதிகளும் தடுத்து வைக்கப்பட்டுள்ள பகுதிக்கு அனுமதி பெற்ற விசேட அதிகாரிகள் மாத்திரமே செல்ல முடியும் என திணைக்களத்தின் அதிகாரியொருவர் குறிப்பிட்டார்.

குறித்த கைதிகள் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய உபகரணங்களைப் பயன்படுத்தி, போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளமை தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விடயம் தொடர்பில் பொலிஸ் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இதேவேளை, வெலிக்கடை சிறைச்சாலையின் புலனாய்வுப் பிரிவு உடன் அமுலுக்கு வரும் வகையில் நேற்று (26) கலைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தலதா அத்துகோரளவின் ஆலோசனைக்கு அமைய, வெலிக்கடை சிறைச்சாலையின் புலனாய்வுப் பிரிவு கலைக்கப்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் பதிவான ஊழல் மற்றும் முறைகேடுகள் தொடர்பில் ஆராய்ந்ததை அடுத்து, இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு தெரிவித்தது.

Sharing is caring!