போதைப் பொருள் மன்னர்களை தூக்குத் தண்டனைக் கைதிகளாக நீக்கப்பட்டுள்ளது

வெலிக்கட சிறைச்சாலையில் உள்ள போதைப் பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட குற்றவாளியாக தீர்ப்பளிக்கப்பட்டுள்ள முன்னணி போதைப் பொருள் மன்னர்களான வெலே சுதா மற்றும் தர்மராஜா சுதேஷ் எனும் பெயரையுடைய சூசை ஆகியோர் தூக்குத் தண்டனைக் கைதிகளாக பெயரிடப்பட்டுள்ள 18 பேரின் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் நிஷாந்த டனசிங்க தெரிவித்துள்ளார்.

இவர்களுக்காக மேன் முறையீடு செய்யப்பட்டுள்ளதனால் இவர்களைப் பட்டியலில் உட்படுத்தவில்லையெனவும் ஆணையாளர் கூறியுள்ளார்.

சூசை என்பவர் இதற்கு முன்னர் சிறைச்சாலைக்குள் தொலைபேசி அழைப்பின் மூலம் 24 கிலோ போதைப் பொருளை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டபோது போதைப் பொருளுடன் இருவர் பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இந்த கைது செய்யப்பட்ட இருவரின் வாக்கு மூலத்தின் படி சூசைதான் இந்த வியாபாரத்தில் ஈடுபட்டார் என்பதும் அறியவந்துள்ளது.

வெலே சுதாவும் கடந்த காலங்களில் சிறையிலிருந்தே போதைப் பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டதற்கான ஆதாரங்கள் பல விசாரணைகளின் மூலம் வெளியாகியிருந்தன.

இந்த சிறைக் கைதிகள் மரண தண்டனை விதிக்கப்பட்டவர்கள். இருப்பினும், இவர்கள் தமக்கு எதிரான தீர்ப்புக்கு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளனர். இதனால், இவர்கள் இருவரினதும் பெயர்கள் தூக்குத் தண்டனை வழங்கப்படவுள்ள பெயர்ப் பட்டியலில் சேர்க்கப்படவில்லையெனவும் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.

தூக்கில் போடவேண்டியவர்களின் பெயர்ப் பட்டியல் நேற்றைய தினம் சிறைச்சாலைகள் திணைக்களத்திடமிருந்து நீதி அமைச்சிடம் கையளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Sharing is caring!