மகாநாயக்க தேரர்கள் இணங்கினால் மட்டுமே ஜம்பர் அணிவேன்

வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரரின் உடல்நிலை தேறியுள்ளதாகவும் இன்னும் ஒரு வாரத்துக்குள் சிறைச்சாலைக்குள் அனுமதிக்கப்படவுள்ளதாகவும் சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள தேரருக்கு சிறைச்சாலை வைத்தியசாலையில் அணிவதற்கு ஜம்பர் ஒன்று வழங்கப்பட்டிருந்த போதிலும், அதனை அணிவதற்கு தேரர் மறுப்புத் தெரிவித்துள்ளார்.

மகாநாயக்க தேரர்கள் இணங்கினால் மட்டுமே தான் ஜம்பர் அணிவதாக ஞானசார தேரர் சிறைச்சாலை அதிகாரிகளிடம் குறிப்பிட்டுள்ளார். அப்படியல்லாமல், எக்காரணம் கொண்டும் தனது காவி உடையைக் கலைய மாட்டேன் எனவும் தேரர் கூறியுள்ளார்.

இது தொடர்பில் சிறைச்சாலை நிருவாகம் சிறைச்சாலை தலைமையகத்துக்கு அறிவித்தல் வழங்கியுள்ளதாகவும், இதற்கான அடுத்த கட்ட நடவடிக்கை என்னவென சிறைச்சாலைகள் அமைச்சை கோரியுள்ளதாகவும் சிறைச்சாலை வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.

Sharing is caring!