மகிந்தவிற்கு 24 மணிநேரம் காலக்கெடு

24 மணிநேரத்திற்குள் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்திற்கு தேவையான 113 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை திரட்டி விட்டு தனக்கு அறிவிக்குமாறு மகிந்த ராஜபக்சவிடம் கூறியுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பொலன்னறுவைக்கு புறப்பட்டுச் சென்றுள்ளதாக தெரியவருகிறது.

ஜனாதிபதி நியமித்த அரசாங்கத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் சந்திப்பில் வைத்து ஜனாதிபதி, இதனை கூறியுள்ளார்.

நாடாளுமன்றத்திற்குள் ஐக்கிய தேசிய முன்னணி தலைமையில் ஏனைய அனைத்து கட்சிகளும் ஒரு கூட்டணியாக இருப்பதால், தான் பெரும் அழுத்தங்களை எதிர்நோக்கி வருவதாகவும் ஐக்கிய தேசிய முன்னணி நிரூபிக்கும் பெரும்பான்மையை தொடர்ந்தும் நிராகரிப்பது சிக்கலுக்குரியது எனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார்.

ஜனாதிபதியின் இந்த அறிவிப்பை அடுத்து நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க ராஜபக்ச தரப்பினர் நாடாளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கும் நடவடிக்கையில் மீண்டும் இறங்கியுள்ளதாக தெரியவருகிறது.

நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் பேரம் பேசும் நடவடிக்கைகள் நேற்றிரவில் இருந்து ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் ஐக்கிய தேசிய முன்னணியின் சில நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விலைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் அணி மாற வழங்கப்படும் தொகை இரட்டிப்பாக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

நாமல் ராஜபக்சவுடன் இணைந்து கறுப்பு பணத்தை வெள்ளையாக மாற்றியதாக குற்றம் சுமத்தப்பட்ட நிலையில், அரச சாட்சியாளராக மாறிய வர்த்தகர் ஒருவர் உட்பட சிலர் அணி மாறும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பணத்தை கொடுக்க தயாராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Sharing is caring!