மக்களுக்கு நல்ல பணிகளை ஆற்றுவதால்தான் தனக்கு எதிர்ப்பு
மக்களுக்கு நல்ல பணிகளை ஆற்றுவதால்தான் தனக்கு எதிர்ப்பு வெளியிடப்படுவதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
இருதய நெஞ்சறை சத்திர சிகிச்சை நிபுணர் மருத்துவக் கலாநிதி சிதம்பரநாதன் முகுந்தனுக்கு தென்மராட்சியில் நேற்று இடம்பெற்ற மதிப்பளிப்பு விழாவில் பங்கேற்று உரையாற்றுகையிலேயே முதலமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.அவர் அங்கு முக்கியமாகத் தெரிவித்ததாவது,
நல்ல பணிகளை ஆற்றுகின்ற மக்களுக்கு சில எதிர்ப்புக்கள் வரத்தான் செய்யும். வடமாகாண முதலமைச்சர் அதற்கொரு உதாரணம். எனினும் தடைகளைத் தாண்டி முனைப்புடன் முன்னேற இந்தளவு பெரிய மக்கட் கூட்டமும் சமூக அமைப்புக்களும் தனக்குப்; பின்னால் இருப்பதை வைத்திய கலாநிதி முகுந்தன் மறந்து விடமாட்டார் என்று நம்புகின்றேன்.
மருத்துவக் கலாநிதி முகுந்தன், யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் 2017ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 20ஆம் திகதி திறந்த இருதய சத்திர சிகிச்சைக் கூடத்தை வெற்றிகரமாகத் திறந்து அதை நடத்திச் சென்றதைப் பாராட்டும் முகமாக கொழும்பிலிருந்து சுகாதார சேவைகள் அமைச்சர் ராஜித சேனாரத்ன மற்றும் வைத்திய சேவைகள் பணிப்பாளர் நாயகம் இருவரும் நேரடியாக இங்கு சமூகமளித்தனர்.
சத்திரசிக்சைக்கு உட்படுத்தப்பட்ட நோயாளர்களுக்கு பழக்கூடைகளை வழங்கியும், வைத்திய நிபுணருக்கு மலர்க்கொத்துக்கள் வழங்கியும் மதிப்பளித்துச் சென்றமையை அனைத்துப் பத்திரிகைகளும் பிரசுரித்திருந்தன.
இவ்வாறு திறமை மிக்கவர்கள் கொழும்புத் தலைமைகளினால் மதிப்புடன் உற்று நோக்கப்படுகின்றார்கள். எம்மவராலோ அவர்கள் பொறாமையுடன் நோக்கப்படுகின்றார்கள் – என்றார்.