மக்களின் பணத்தை முறையற்ற விதத்தில் பயன்படுத்திய மற்றுமொரு சம்பவம் அம்பலம்

முறிகள் மோசடியைப் போன்று மக்களின் பணத்தை முறையற்ற விதத்தில் பயன்படுத்திய மற்றுமொரு சம்பவம் அம்பலமாகியுள்ளது.

மின்சார மாஃபியா தொடர்பில் பல்வேறு சந்தர்ப்பங்களில் நியூஸ்ஃபெஸ்ட் தகவல்களை வெளியிட்டுள்ளது.

லங்கா ட்ரான்ஸ்ஃபோமர் என்றழைக்கப்படும் LTL மின்சார சபையின் பெரும்பான்மையான பங்குகள் சில நிறுவனங்களூடாக முன்னெடுக்கப்பட்டுள்ளமை, அங்கு இடம்பெற்ற பாரிய மோசடிகளில் ஒன்றாகும்.

மக்களின் பணத்தை பாரியளவில் மோசடி செய்யும் இந்த நிறுவனம் தொடர்பில் Verité Research நிறுவனத்தினூடாக முன்னெடுக்கப்பட்ட ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

இலங்கை அரசு மக்களின் பாரியளவு பணத்தை எந்தவித பிரதிபலனுமின்றி முதலீடு செய்துள்ளதாக இந்த ஆய்வினூடாகக் கண்டறியப்பட்டுள்ளது.

கரவலப்பிட்டிய பகுதியில் 300 மெகாவோட்ஸ் மின்சாரத்தை பெற்றுக்கொள்வதற்கு West Coast Power என்ற நிறுவனத்தால் 2006 ஆம் ஆண்டில் மின் உற்பத்தி நிலையம் ஆரம்பிக்கப்பட்டது.

லங்கா ட்ரான்ஸ்ஃபோமர் நிறுவனத்தின் பாரியளவு பங்குகளுக்கான உரித்தைக் கொண்ட லக் தனவி என்ற நிறுவனம் தலைமை பங்குதாரராக செயற்படவேண்டும் என ஆரம்பத்தில் தீர்மானிக்கப்பட்டிருந்தது.

எனினும், செயற்றிட்டத்திற்காக 22.7 பில்லியன் ரூபா கடனை HSBC வங்கியினூடாக அரச பிணையின் கீழ் பெற்றுக்கொண்டனர்.

இதேபோல, அரச பிணையின் கீழ் தேசிய சேமிப்பு வங்கியூடாக மேலும் 2.9 பில்லியன் ரூபா கடனும் ஊழியர் சேமலாப நிதியத்தின் 2.9 பில்லியன் ரூபா கடனும் இந்த செயற்றிட்டத்திற்காக பெற்றப்பட்டுள்ளது.

28.7 பில்லியன் ரூபா கடன் தொகை West Coast நிறுவனத்திற்கு கரவலப்பிட்டிய செயற்றிட்டத்திற்காக அரச பிணையின் கீழ் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது.

நாட்டில் அமுலிலுள்ள வெளிநாட்டு கடன் சட்டத்திற்கமைய, இவ்வாறான செயற்றிட்டங்களுக்காக அரசு பிணையாளியாகும் பட்சத்தில் அந்த செயற்றிட்டத்தின் 50 வீதமான உரித்து அரசுக்கு சொந்தமாகும்.

தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதற்காக West Coast நிறுவனம் 50 வீத பங்கை 14 சந்தர்ப்பங்களில் தற்காலிக அடிப்படையில் அரசாங்கத்திற்கு கையளித்துள்ளமை ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.

2011 ஆம் ஆண்டின் மார்ச் மாதமளவில் West Coast நிறுவனத்தின் 50 வீத பங்குகள் அரசிடம் காணப்பட்டதுடன், இலங்கை மின்சார சபைக்கு சொந்தமான இலங்கை மின்சார தனியார் நிறுவனத்திடம் 18.2 வீத பங்கும் ஊழியர் சேமலாப நிதியத்திடம் 27.1 வீதமான பங்கும் லக் தனவி நிறுவனத்திடம் 4.8 வீதமான பங்கும் காணப்பட்டது.

எனினும், பிணை வழங்கியமைக்காக இலங்கை அரசிற்கு எவ்வித இலாபப் பங்குகளும் வழங்கப்படவில்லை என்பது ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது.

லக் தனவி லொக்கோ மற்றும் ஊழியர் சேமலாப நிதியம் ஆகியவற்றுக்கு மாத்திரம் இலாபப் பங்குகள் வழங்கப்பட்டுள்ளன.

மிகவும் வியப்பூட்டும் வகையில் இந்த கொடுப்பனவுகள் வழங்கப்பட்டுள்ளன.

4.8 வீத பங்குடைமை கொண்ட லக் தனவி நிறுவனத்திற்கு 39.75 இலாப வருமானம் வழங்கப்பட்டுள்ளது.

21.1 வீத பங்குடைமையை கொண்ட ஊழியர் சேமலாப நிதியத்திற்கு 20.04 இலாப வருமானம் வழங்கப்பட்டுள்ளது.

இலங்கை மின்சார தனியார் நிறுவனத்திற்கு 18.2 வீத பங்குகள் காணப்பட்ட நிலையில், அவர்களுக்கு 20.4 வீத இலாபம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த செயற்றிட்டத்தின் மற்றுமொரு வியத்தகு விடயமாக கடன் தொகை திருப்பி செலுத்தப்பட்டதன் பின்னர் அரசாங்கத்திடம் காணப்படும் 50 வீத பங்கை லக் தனவி நிறுவனத்திற்கு கையளிக்க வேண்டும் என்ற இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளமையாகும்.

எவ்வாறாயினும், West Coast நிறுவனத்தின் பங்குகளில், 48.5 வீதமானவை இலங்கை மின்சார சபைக்கு உரித்தில்லை என்பது ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது.

Sharing is caring!