மத்திய வங்கி முறி மோசடி….4 வருடம் பூர்த்தி….இன்னும் தண்டனை இல்லை

இலங்கையில் இடம்பெற்ற மிகப்பெரிய மோசடியான மத்திய வங்கியின் முறிகள் மோசடி இடம்பெற்று இன்றுடன் 4 வருடங்கள் பூர்த்தியாகியுள்ளன.

4 வருடங்களுக்கு முன்னதாக இதேபோன்றதோர் நாளில் 30 வருடங்களில் பூரணத்துவம் அடையும் ஒரு பில்லியன் ரூபாவுக்கான முறிகளை ஏலத்தில் விடுவதற்காக, இலங்கை மத்திய வங்கி அறிவித்தல் பிறப்பித்தது.

எனினும், இந்தக் கொடுக்கல் வாங்கல் இடம்பெற்றுக் கொண்டிருக்கையில் அதன் மொத்தப் பெறுமதியை 20 பில்லியன் ரூபா வரை அதிகரிப்பதற்கு மத்திய வங்கியின் அப்போதைய ஆளுநர் அர்ஜூன மகேந்திரன் ஆலோசனை வழங்கியிருந்தார்.

இதேவேளை, மத்திய வங்கி அதிகாரிகளின் ஆட்சேபனை காரணமாக அந்தத் தொகை 10 பில்லியன் ரூபா வரை குறைக்கப்பட்டது.

இதில் பெருமளவு முறிகளை பேர்ப்பர்ச்சுவல் ட்ரேஷரிஸ் நிறுவனம் அதிக வட்டிக்கு கொள்வனவு செய்தது.

வழமையான வட்டி வீதம் 9.85 ஆக இருக்கையில் 12.05 வீதத்திற்கு மேற்பட்ட தொகையில் முறிகள் கொள்வனவு செய்யப்பட்டன.

மற்றுமொரு முதல்நிலை கொள்வனவாளரான இலங்கை வங்கியும் பேப்பர்ச்சுவல் ட்ரேஷரிஸ் நிறுவனம் சார்பில் விலைமனுத் தாக்கல் செய்திருந்தது.

இந்தநிலையில், ஊடகங்கள் வாயிலாக செய்திகள் வெளியாகி மக்களின் கருத்து மேலோங்கியபோது, 2015 மார்ச் 17 ஆம் திகதி தாம் முறிகள் விநியோக நடைமுறையை மாற்றுவதற்கு கட்டளையிட்டதாக, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் அறிவித்தார்.

பின்னர், பிரதமர் ஐக்கிய தேசியக் கட்சியுடன் தொடர்புடைய சிலரை உள்ளடக்கி பிட்டிபன குழுவை நியமித்ததுடன், அந்தக் குழு முன்னாள் மத்திய வங்கி ஆளுநரை அனைத்துக் குற்றச்சாட்டுக்களிலிருந்தும் விடுவித்தது.

இந்த விடயம் தொடர்பில் விசாரணை நடத்துமாறு அப்போதைய சபாநாயகர் சமல் ராஜபக்ஸ கோப் குழுவின் தலைவராக இருந்த டிவ் குணசேகரவிற்கு அறிவித்தார்.

கோப் குழுவின் அறிக்கை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுவதற்கு முதல்நாள் 2015 ஆம் ஆண்டு ஜூன் 26 ஆம் திகதி எதிர்பாராத நேரத்தில் பாராளுமன்றம் கலைக்கப்பட்டது.

பிரதமர் வழங்கிய ஆலோசனையை தாம் நடைமுறைப்படுத்தியதாக மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் வழங்கிய வாக்குமூலம் மூழ்கடிக்கப்பட்ட கோப் அறிக்கையில் உள்ளடக்கப்பட்டிருந்த முக்கிய விடயமாகும்.

2015 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 17 ஆம் திகதி புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்தவுடன் சுனில் ஹந்துன்நெத்தி புதிய கோப் தலைவராக தெரிவானதுடன், 2015 ஆம் ஆண்டு நவம்பர் 26 ஆம் திகதி மீண்டும் விசாரணைகள் ஆரம்பிக்கப்படுகின்றன.

இதற்கிடையே, 2016 ஆம் ஆண்டு மார்ச் 29 மற்றும் 30 ஆம் திகதிகளில் சர்ச்சைக்குரிய மேலும் இரண்டு முறிகள் கொடுக்கல் வாங்கல்கள் இடம்பெற்றன.

2016 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதத்தில் கோப் அறிக்கை வெளியாகியது.

நாளுக்கு நாள் பெருக்கெடுத்த மக்களின் அதிருப்தி மற்றும் அழுத்தங்கள் காரணமாக 2017 ஆம் ஆண்டு ஜனவரி 27 ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 2015 ஆம் ஆண்டு ஜனவரி 27 ஆம் மற்றும் 2016ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் திகதிகளில் இடம்பெற்ற முறிகள் கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பில் ஆராய்வதற்காக ஜனாதிபதி ஆணைக்குழு ஒன்றை நியமித்தார்.

ஆணைக்குழு 11 மாதங்களாக விசாரணையை நடத்தி தயாரித்த அறிக்கை 2017 ஆம் ஆண்டு டிசம்பர் 30 ஆம் திகதி ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்பட்டதுடன் பின்னர் அது சட்டமா அதிபருக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

ஆணைக்குழுவின் பரிந்துரையின்படி, அர்ஜுன மகேந்திரனுக்கு ஏற்கனவே அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டுள்ளதுடன் அவர் சிங்கப்பூரில் இருப்பதாக கூறப்பட்டலும் இதுவரை அவரை கண்டுபிடிக்க முடியாமல்போயுள்ளது.

அவர் தொடர்ச்சியாக இலங்கையில் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் நிறுவனங்களிடமிருந்து தலைமறைவாக உள்ளார்.

இதேவேளை, 10 மாதங்களாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அர்ஜூன் அலோசியஸ் மற்றும் கசுன் பாலிசேன ஆகியோருக்கு இந்த வருட ஆரம்பத்தில் பிணை வழங்கப்பட்டது.

51 நாள் அரசியல் நெருக்கடிக்கு மத்தியிலும் ரணில் விக்ரமசிங்க இன்னமும் நாட்டின் பிரதமதாக பதவி வகிக்கின்றார்.

இலங்கை வரலாற்றில் மிகப்பெரிய மோசடி இடம்பெற்று 4 வருடங்கள் பூர்த்தியானாலும், இது தொடர்பில் பொறுப்பு கூறுவதற்கு அரசாங்கத்திலிருந்து இதுவரை எவரும் முன்வரவில்லை என்பதுடன் பொறுப்புக்கூற வேண்டிய எவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்படவில்லை.

Sharing is caring!