மன்னார் புதைகுழி……எச்சங்களின் கால அளவு வெளியானது

 மன்னார் மனிதப் புதைகுழியில் மீட்கப்பட்ட மனித எச்சங்களின் மாதிரிகள் கி.பி.1400 முதல் கி.பி. 1650 ஆம் ஆண்டு காலப்பகுதிக்கு உரியவை என தெரியவந்துள்ளது.

அமெரிக்காவின் ஃப்ளோரிடாவைத் தளமாகக் கொண்ட பீட்டா நிறுவனம் மேற்கொண்ட கார்பன் பரிசோதனை அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

மன்னார் சதொச மனிதப் புதைகுழியில் மீட்கப்பட்ட எலும்புகள் தொடர்பிலான கார்பன் பரிசோதனை அறிக்கையின் மூலப்பிரதி மன்னார் நீதவான் நீதிமன்றுக்கு நேற்று (06) கிடைத்தது.

மன்னார் நீதிமன்றுக்கு கிடைக்கப்பெற்றுள்ள அறிக்கை பகிரங்க ஆவணம் என்பதால், விரும்பியவர்கள் விண்ணப்பித்து அதனை பெற்றுக்கொள்ள முடியும் என ஏற்கனவே நீதிமன்றத்தினால் அறிவிக்கப்பட்டிருந்தது.

மன்னாரில் கடந்த வருடம் மார்ச் மாதத்தில் சதொச கட்டடம் அமைப்பதற்காக தெரிவு செய்யப்பட்ட காணியில் மனித எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்டன.

மன்னார் நீதிமன்ற உத்தரவின் பேரில் கடந்த மே மாதம் 28 ஆம் திகதி முதல் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வந்ததுடன், தற்போது வரை 355 மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன.

இதுவரை மீட்கப்பட்ட மனித எச்சங்களில் 28 சிறுவர்கள் உடையது என கண்டறியப்பட்டது.

அகழ்வின் போது மீட்கப்பட்ட மனித எலும்புக்கூடுகளில் கூரிய ஆயுதத்தால் பலமாக தாக்கப்பட்டமைக்கான அடையாளங்கள் காணப்படுவதாக அகழ்வில் ஈடுபட்ட நிபுணர்கள் குறிப்பிட்டனர்.

உடல்கள் ஒழுங்கற்ற வகையில் அவசரமாக புதைக்கப்பட்டுள்ளமை விசாரணைகளின் ஊடாக கண்டறியப்பட்டது.

கடந்த டிசம்பர் மாதம் 6 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட அகழ்வுப் பணிகளின் போது விலங்கால் கால்கள் பிணைக்கப்பட்ட எலும்புக்கூடொன்று கண்டுபிடிக்கப்பட்டது. முழங்காலுக்கு கீழ் பகுதியே இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டது.

இந்நிலையில், மனிதப் புதைகுழியிலிருந்து மீட்கப்பட்ட எச்சங்களை ஆய்வுக்குட்படுத்துவதற்காக, அவற்றை அமெரிக்காவிற்கு அனுப்பிவைக்க கடந்த வருடம் ஒக்டோபர் மாதத்தில் நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

இந்த கார்பன் பரிசோதனைக்காக ஜனவரி 23 ஆம் திகதி ஒரு குழுவினர் அமெரிக்காவிற்கு சென்றனர். இந்த குழுவில் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகத்தின் பிரதிநிதி ஒருவரும் உள்ளடக்கப்பட்டிருந்தார்.

அவர்கள் எச்சங்களின் மாதிரிகளை அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாநிலத்திலுள்ள பீட்டா நிறுவனத்திடம் கார்பன் பரிசோதனைக்காக ஜனவரி மாதம் 25 ஆம் திகதி ஒப்படைத்தனர்.

பகுப்பாய்விற்காக 6 மாதிரிகள் பீட்டா அனலைசிங் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டிருந்த நிலையில்,  5 மாதிரிகளின் அறிக்கை கடந்த 15 ஆம் திகதி கிடைக்கப்பெற்றது.

தொடை எலும்பு மற்றும் பற்களின் மாதிரிகளே ஆய்வுகளுக்காக ஒப்படைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், மன்னார் வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி ஷமிந்த ராஜபக்ஸ தலைமையில் தொடர்ந்தும் ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

155 ஆவது நாளாக இன்றும் அகழ்வுப் பணிகள் இடம்பெற்றன.

Sharing is caring!