மயிலிட்டியில் வீட்டின் அத்திபாரத்தில் கண்ணிவெடிகள், ரவைகள்

மயிலிட்டி பகுதியில் விடுவிக்கப்பட்ட காணியில் சுவர் கட்டும் பணிக்காக ஏற்கனவே இருந்த அத்திபாரத்தை தோண்டிய போது இரண்டு கண்ணிவெடிகளும் துப்பாக்கி ரவைகளும் மீட்கப்பட்டுள்ளது.

பருத்தித்துறை பிரதான வீதி, மயிலிட்டியில் அமைந்துள்ள குறித்த காணியை துப்பரவு செய்து சுற்று மதில் அமைப்பதற்காக ஏற்கனவே இருந்த அத்திபார பகுதியை தோண்டும் பணி இன்று நடைபெற்றுள்ளது.

இதன்போது இரண்டு கண்ணிவெடிகளும் சிறிய நூல் சாக்கில் பொதி செய்யப்பட்ட துப்பாக்கி ரவை தொகுதியும் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து காணி உரிமை யாளரால் அப்பகுதி கிராம அலுவலருக்கு தகவல் தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

நாளை வியாழன் அன்று பொலிஸார் மற்றும் கண்ணிவெடி அகற்றும் பிரிவிற்கு தகவல் வழங்கி மேல் நடவடிக்கை எடுக்க இருப்பதாக கிராம சேவையாளர் தெரி வித்துள்ளதாக காணி உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

குறித்த காணி விடுவிக்கப்பட்டு சுமார் இரண்டு ஆண்டுகள் ஆக உள்ள நிலையில் இன்னும் ஆபத்தான வெடி பொருட்கள் நிலத்திற்கடியில் இருந்து மீட்கப்பட்டு வருகின்றமை அப்பகுதி மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

Sharing is caring!