மல்லாகம் துப்பாக்கிச்சூடு: 11 சந்தேகநபர்கள் தொடர்ந்தும் விளக்கமறியலில்

யாழ்ப்பாணம் – மல்லாகம் சந்தியில் கடந்த 17 ஆம் திகதி மாலை அமைதியின்மையை ஏற்படுத்தியமை தொடர்பில் கைது செய்யப்பட்ட 11 சந்தேகநபர்கள் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

மல்லாகம் நீதவான் ஆசிர்வாதம் கிரேசியன் அலெக்ஸ்ராஜா முன்னிலையில் சந்தேகநபர்களை ஆஜர்படுத்தியதை அடுத்து, எதிர்வரும் 12 ஆம் திகதி வரை அவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் சார்பில் 5 சட்டத்தரணிகள் இன்று மன்றில் ஆஜராகினர்.

சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் கைது செய்யப்படவில்லை எனவும், ஆலய வழிபாடுகளில் ஈடுபட்டவர்களே கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் சந்தேகநபர்கள் சார்பில் ஆஜராகிய சட்டத்தரணிகள் மன்றுக்கு அறிவித்துள்ளனர்.

சம்பவத்தின் போது காயமடைந்தவர்களை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவர்கள் மற்றும் உதவி புரிந்தவர்களே கைது செய்யப்பட்டுள்ளதாகவும் சட்டத்தரணிகளால் மன்றுக்கு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை, சந்தேகநபர்களை பிணையில் விடுவிக்குமாறு அவர்கள் சார்பில் ஆஜராகிய சட்டத்தரணிகள் நீதவானிடம் கோரிக்கை முன்வைத்தனர்.

எனினும், சந்தேகநபர்களின் பாதுகாப்பு மற்றும் அமைதியை பாதுகாக்கும் வகையில் கைது செய்யப்பட்டுள்ளவர்கள் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்படுவதாக நீதவான் அறிவித்துள்ளார்.

அமைதியின்மையின் போது துப்பாக்கிப்பிரயோகம் நடத்திய பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் இன்றும் மன்றில் முற்படுத்தப்படவில்லை.

மல்லாகம் சந்தியில் இரு குழுக்களிடையே கடந்த 17 ஆம் திகதி இடம்பெற்ற அமைதியின்மையின் போது, அங்கு சென்றிருந்த சுன்னாகம் பொலிஸாரால் துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டது.

இதன்போது, 32 வயதான பாக்கியராசா சுதர்சன் என்பவர் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்தார்.

இதன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை அடுத்து, சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Sharing is caring!