மஹிந்த பதவியிலிருந்து விலகுவதே விவேகமான செயல்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பிரதமர் பதவியில் இருந்து விலகி அடுத்த வருட ஜனாதிபதி தேர்தலில் சுதந்திரமானதும் நேர்மையானதுமான போட்டியொன்றில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வெற்றிக்கு உதவுவதற்கு அவர் தனது கணிசமான அரசியல் ஆற்றல்களைப் பயன்படுத்துவதே விவேகமான செயலாக இருக்கும் என்று இலங்கைக்கான முன்னாள் அமெரிக்க தூதுவரும் தெற்காசிய மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்குப் பொறுப்பான உதவி இராஜாங்க அமைச்சருமான றொபேர்ட் பிளேக் கூறியிருக்கிறார்.

அமெரிக்க அரசாங்க பதவிகளில் இருந்து இரு வருடங்களுக்கு முன்னர் ஓய்வுபெற்ற பிறகு மக் லார்ட்டி அசோசியேட்ஸ் என்ற நிறுவனத்தின் சார்பில் வெளிநாடுகளில் அமெரிக்க வர்த்தக விவகாரங்களுக்கான ஆலோசகராக பணியாற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினதும் பிரதமர் ராஜபக்சவினதும் அண்மைய நடவடிக்கைகள் ஜனநாயகத்தின் மீதும் நல்லாட்சி மீதும் அவர்களுக்கு இருக்கும் பற்றுறுதி தொடர்பில் வாஷிங்டன், புதுடில்லி, டோக்கியோவிலும் வேறு இடங்களிலும் மற்றும் முக்கியமான கேள்விகளைக் கிளப்பியிருக்கின்றன என்று குறிப்பிட்டிருக்கிறார்.

‘ ராஜபக்சாக்கள், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் இந்தோ – பசுபிக்கில் விரிவடையும் அரசியல், இராஜதந்திர மோதலும்’ என்ற தலைப்பில் கொழும்பு ஆங்கிலத் தினசரியொன்றில் நேற்றைய தினம் பிளேக் எழுதிய கட்டுரையொன்று வெளியாகியிருக்கிறது.

அதில் அவர் கூறியிருப்பதாவது ;

இலங்கையின் தற்போதைய அரசியல் முட்டுக்கட்டைநிலை அடுத்த வருடம் ஒரு ராஜபக்சவின் தலைமையில் தெரிவுசெய்யப்படக்கூடிய அரசாங்கமொன்றுக்கு அமெரிக்காவும் ஏனைய நாடுகளும் அளிக்கக்கூடிய எதிர்கால ஆதரவுக்கு தங்களது தற்போதைய செயற்பாடுகள் கொண்டுவரக்கூடிய விளைவுகள் குறித்து மகிந்த ராஜபக்சவும் கோதாபய ராஜபக்சவும் சிந்தித்துப் பார்ப்பதற்கான முக்கியமான சந்தர்ப்பமொன்றை வழங்கியிருக்கிறது.

பிரதமர் ராஜபக்சவின் அரசாங்கத்துக்கு எதிராக இரு நம்பிக்கையில்லா தீர்மானங்களும் அரசாங்க அமைச்சுக்களுக்கு நிதியை நிறுத்துவதற்கான வேறு இரு தீர்மானங்களும் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டிருக்கின்ற போதிலும், பதவியில் இருந்து இறங்க அவர் மறுத்திருக்கிறார்.

அவரின் இந்த மறுப்பு இலங்கையின் அரசியலமைப்பு மீது அவருக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கும் இருக்கக்கூடிய பற்றுதலைக் கேள்விக்குள்ளாக்கியிருப்பது மாத்திரமல்ல, தங்களதும் கட்சியினதும் எதிர்காலத்துக்கு அநாவசியமான சேதத்தை ஏன் அவர்கள் ஏற்படுத்துகிறார்கள் என்ற கேள்வியையும் கிளப்புகிறது.

இவ்வருட முற்பகுதியில் ராஜபக்சவும் பொதுஜன பெரமுனவும் உள்ளூராட்சித்தேர்தல்களில் பெற்ற பெருவெற்றி இலங்கையில் அவர் தொடர்ந்தும் பெரும் செல்வாக்குடன் விளங்குகிறார் என்பதை தெளிவாக வெளிக்காட்டியது.

அடுத்த வருடம் ஜனாதிபதி தேர்தல் முன்கூட்டியே நடத்தப்படக்கூடும். அதில் போட்டியிடமுடியாதவாறு அரசியலமைப்பு மகிந்த ராஜபக்சவை தடுக்கிறது என்றபோதிலும் அவரது சகோதரர் பலம்பொருந்திய ஒரு வேட்பாளராக நிற்கக்கூடும்.

ஜனாதிபதியாக மகிந்த ராஜபக்ச ஆட்சியதிகாரத்தில் இருந்த காலகட்டத்தில் சீனாவுடன் ராஜபக்சாக்கள் சிறப்பான உறவுகளைக் கொண்டிருந்தார்கள்.

அம்பாந்தோட்டை துறைமுக அபிவிருத்திக்கும் வேறுபல பாரிய திட்டங்களுக்கும் சீனா நிதியுதவி செய்தது.

அம்பாந்தோட்டை துறைமுகத் திட்டம் சீனாவின் புதிய பட்டுப்பாதை திட்டம் என்று வர்ணக்கப்படுகின்ற ‘ ஒரு மண்டலம், ஒரு பாதை ‘ செயற்திட்டத்தின் வள்ளன்மையை அனுபவிக்கின்ற நாடுகளுக்கு எச்சரிக்கைக்குரிய கதையாக மாறியிருக்கிறது.

இலங்கை கடன்களைத் திருப்பிக்கொடுக்க முடியாமல் போனபோது அந்தக் கடன்தொகைக்கு நிகரான பங்குகளை அம்பாந்தோட்டை துறைமுகத்தில் தனக்குத் தருமாறு சீனா பேச்சுவார்த்தைகளை நடத்திப் பெற்றுக்கொண்டது.

அதற்குப் பிறகு மாலைதீவு, பாகிஸ்தான், மலேசியாவில் புதிதாக பதவிக்கு வந்த அரசாங்கங்கள் தங்களது நாடுகளில் நடைமுறைப்படுத்தப்படுகின்ற ‘ ஒரு மண்டலம், ஒரு பாதை ‘ யின் கீழான திட்டங்களில் இருந்து கிடைக்கப்போகின்றதாக எதிர்பார்க்கப்படுகின்ற வருவாய்கள் சீனாவிடமிருந்து தாங்கள் பெற்ற கடன்களைத் திருப்பிச்செலுத்துவதற்கு போதுமானவையாக இருக்குமா என்பதை உறுதிசெய்துகொள்வதற்காக அத்திட்டங்களை மீளாய்வு செய்யப்போவதாக அறிவித்தன.

அதேவேளை, ‘ ஒரு மண்டலம், ஒரு பாதை ‘ செயற்திட்டத்தை மேலும் கூடுதல் உறுதிப்பாட்டுடன் முன்னெடுக்கும் சீன ஜனாதிபதி சி ஜின்பிங் தென்சீனக்கடலின் சர்வதேசப்பரப்பில் கட்டுப்பாட்டைக்கொண்டிருக்கக்கூடிய வல்லமையை பெய்ஜிங்கிற்கு கொடுக்கும் திட்டங்களைத் தொடருகின்ற நிலையில், ஆசியாவில் உள்ள நாடுகள் அதிகரிக்கும் சீனாவின் பொருளாதார மற்றும் இராணுவ செல்வாக்கிற்கு எதிராக சரிசம வலிமையைத் தோற்றுவிக்கும் தந்திரோபாயமாக அமெரிக்கா, ஜப்பான், இந்தியா மற்றும் முக்கியமான நாடுகளுடன் நல்லுறவுகளை பேணுவதற்கான விருப்பத்தை கூடுதலாக வெளிப்படுத்துகின்றன.

இதன் பிரதிபலிப்பாக அமெரிக்காவும் இந்தியா, ஜப்பான் மற்றும் அவுஸ்திரேலியாவும் திறந்த, சுதந்திரமான , சுபிட்சமிக்க இந்தோ – பசுபிக்கை உறுதிசெய்துகொள்வதற்கான பரந்ததொரு இந்தோ – பசுபிக் தந்திரோபாயத் திட்டத்தை முன்வைத்திருக்கின்றன.

அபிவிருத்திக்கு வழிவகுக்கும் முதலீடுகளைச் சிறப்பான முறையில் பயன்படுத்துவதற்கான ஏற்பாடுகளை உள்ளடக்கிய சட்டமொன்றை அமெரிக்கா இவ்வருட ஆரம்பத்தில் நிறைவேற்றியிருக்கிறது.

இதன் விளைவாக சர்வதேச அபிவிருத்தி நிதிக்கூட்டுத்தாபனம் என்ற புதிய நிறுவனம் ஒன்று உருவாக்கப்பட்டிருக்கிறது.

சீனாவின் ‘ ஒரு மண்டலம், ஒரு பாதை ‘ திட்டத்துக்கு மாற்றாக நிதி வழங்கல் ஏற்பாடொன்றை வகுத்து வளர்முக நாடுகளில் முதலீடுகளை உத்வேகப்படுத்த அமெரிக்க கோர்ப்பரேட் நிறுவனங்களையும் முதலீட்டாளர்களையும் புதிய நிறுவனம் வழிநடத்தும்.

நல்லாட்சிக்கான நியமங்கள் பலவற்றை முறையாகப் பின்பற்றுகின்ற நாடுகளில் அமெரிக்காவின் புதிய மிலேனியம் சவால் கூட்டுத்தாபனத்தின் திட்டங்களுக்கு மேற்படி புதிய நிறுவனம் உதவியாக செயற்படும்.இலங்கைக்கான புதிய மிலேனியம் சவால் கூட்டுத்தாபன செயற்திட்டம் ஒன்று பரிசீலனையில் இருக்கிறது.

ஜப்பானும் வேறு நாடுகளும் தங்களது சொந்தத்தில் சர்வதேச உட்கட்டமைப்பு மற்றும் இந்தோ- பசுபிக் முன்முயற்சிகளை வகுத்திருக்கின்றன.

இலங்கை – இந்து சமுத்திரத்தில் கப்பல்போக்குவரத்து சந்தடி மிகுந்த கடல் வழிகளுக்கு நெருக்கமாக கேந்திரமுக்கியத்துவ அமைவிடத்தில் இருக்கிறது. படிப்பறிவுமிக்க சனத்தொகையைக் கொண்டுள்ளது.

அத்துடன் விடுதலை புலிகளுடனான போரின் முடிவுக்குப் பிறகு நல்லிணக்கத்தை ஏறற்படுத்துவதற்காக பயனுறுதியுடைய பல நடவடிக்கைகளையும் கடந்த சில வருடங்களாக எடுத்திருக்கிறது. இத்தகைய அனனுகூலங்கள் காரணமாக புதிய இந்தோ- பசுபிக் முன்முயற்சிகளினால் பெரிதும் பயன்படக்கூடிய வாய்ப்பான நிலையில் அது இருக்கிறது.

ஆனால், ஜனாதிபதி சிறிசேனவினதும் பிரதமர் ராஜபக்சவினதும் அண்மைய நடவடிக்கைகள் ஜனநாயகம் மற்றும் நல்லாட்சி மீதான அவர்களின் பற்றுறுதி பற்றி வாஷிங்டன், புதுடில்லி, டோக்கியோவிலும் ஏனைய இடங்களிலும் பாரதூரமான கேள்விகளைக் கிளப்பியிருக்கினறன.

அமெரிக்காவில் அண்மையில் நடைபெற்ற இடைக்காலத் தேர்தல் முடிவுகள் இலங்கை மீது கூடுதல் கண்காணிப்பு மேற்கொள்ளப்படக்கூடிய நிலையைத் தோற்றுவிக்கும்.

அமெரிக்க காங்கிரஸின் ஜனப்பிரதிநிதிகள் சபை மீண்டும் ஜனநாயகக் கட்டியின் கட்டுப்பாட்டில் வந்திருக்கிறது.

மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகத்தை மேம்படுத்தும் செயன்முறைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று அக்கட்சி அறிவித்திருக்கிறது.

எனவே இலங்கை அதன் அண்மைக்கால நடவடிக்கைகள் அமெரிக்க காங்கிரஸின் மேலும் தீவிரமான பரிசீலனைக்கு உட்படும் என்பதை எதிர்பார்த்தேயாகவேண்டும்.

அந்த அண்மைய நடவடிக்கைகள் பதிய சர்வதேச அபிவிருத்தி நிதிக்கூட்டுத்தாபனத்திடமிருந்தும் மிலேனியம் சவால் கூட்டுத்தாபனத்திடமிருந்தும் இலங்கைக்கு கிடைக்கக்கூடிய நிதியை பாதிக்கக்கூடும்.

ராஜபக்ச பிரதமர் பதவியில் இருந்து இறங்கி அடுத்த ஜனாதிபதி தேர்தலில் சுதந்திரமானதும் நேர்மையானதுமான போட்டியின் ஊடாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வெற்றிக்கு உதவுவதை நோக்கி தனக்கிருக்கக்கூடிய கணிசமான அரசியல் ஆற்றலைப் பயன்படுத்துவதே விவேகமான செயலாக இருக்கும் என்பதையே மேற்கூறப்பட்ட நிலைவர ஆய்வு உணர்த்துகிறது.

அவ்வாறு அவர் செய்வாரேயானால், தற்போதைய அரசியல் முட்டுக்கட்டை நிலையை முடிவுக்குக் கொண்டுவரவும் இந்தோ – பசுபிக் பிராந்தியத்தில் புதிய அரசியல் மற்றும் இராஜதந்திர மோதல் விரிவடைகின்ற நிலையில் இலங்கையை வாய்ப்பான ஒரு அந்தஸ்தில் வைக்கவும் உதவமுடியும்.

Sharing is caring!