மின்தூக்கியில் மாட்டிக்கொண்ட 12 பாராளுமன்ற உறுப்பினர்கள்…

பாராளுமன்ற சபை அமர்வுகளில் பங்கேற்பதற்காக இன்று வருகை தந்த உறுப்பினர்கள் சிலர் பாராளுமன்ற கட்டடத்தொகுதியிலுள்ள மின்தூக்கியில் அகப்பட்டனர்.

சுமார் 20 நிமிடங்கள் மின்தூக்கிக்குள் அகப்பட்டிருந்ததாக பாராளுமன்ற உறுப்பினர்கள் கூறினர்.

பாராளுமன்றத்தின் இன்றைய அமர்வு காலை 10.30 மணிக்கு ஆரம்பமாகவிருந்தது.

அதில் கலந்துகொள்வதற்காக வருகை தந்த 12 பாராளுமன்ற உறுப்பினர்கள் மின்தூக்கியில் பயணிக்க ஆரம்பித்த சில நொடிகளில் அது நின்றுவிட்டதாகக் கூறினர்.

தினேஷ் குணவர்தன, பந்துல குணவர்தன, சந்திம வீரக்கொடி, விமல் வீரவன்ச, சி.பி.ரத்நாயக்க, டலஸ் அழகப்பெரும, சந்திரசிறி கஜதீர, காமினி லொக்குகே, மஹிந்த யாப்பா அபேவர்தன, ரஞ்சித் சொய்சா, தயாசிறி ஜயசேகர ஆகிய கூட்டமைப்பின் உறுப்பினர்களுடன் இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் அலுவிஹாரவும் மின்தூக்கியில் இருந்துள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர்களுக்காக பாராளுமன்ற கட்டடத்தொகுதியில் இரண்டு மின்தூக்கிகள் ஒதுக்கப்பட்டுள்ளதுடன், அவற்றில் ஒன்றே இவ்வாறு செயலிழந்துள்ளது.

அதிகபட்சமாக 900 கிலோகிராம் நிறையையே மின்தூக்கி சுமக்கக்கூடியதாக கட்டமைக்கப்பட்டுள்ளது.

12 பாராளுமன்ற உறுப்பினர்கள் மின்தூக்கியில் ஏறிய சந்தர்ப்பத்தில், அபாய எச்சரிக்கை மணி ஒலிக்காமையே பிரச்சினைக்கான காரணம் என கண்டறியப்பட்டுள்ளதாக பாராளுமன்றத்தின் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

இதனையடுத்து, 6 பேர் மாத்திரமே மின்தூக்கியில் பயணிக்க முடியும் என்ற அறிவிப்பை காட்சிப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

எனினும், மின்தூக்கியின் தொழில்நுட்ப விடயங்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களின் தொலைபேசி அழைப்பை ஏற்காமை தொடர்பில் மின்தூக்கியை தயாரித்த நிறுவனத்திடம் அறிக்கை கோரப்பட்டுள்ளதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் கூறினார்.

இந்த சம்பவத்தினால் இன்றைய பாராளுமன்ற அமர்வில் வாதப் பிரதிவாதங்கள் ஏற்பட்டன.

Sharing is caring!