மீண்டும் இலங்கையில் மலேரியா…?

மலேரியா அற்ற நாடாக இலங்கை அறிவிக்கப்பட்டதன் பின்னர் முதலாவது மலேரியா நோயாளி ஒருவர் இனங்காணப்பட்டுள்ளார்.

நோயாளர் ஒருவரின் குருதி மாதிரியை சிங்கப்பூரிலுள்ள தேசிய ஆய்வு நிறுவனத்திற்கு அனுப்பி சோதனைக்குட்படுத்தியபோது இந்த விடயம் உறுதிசெய்யப்பட்டுள்ளதாக, தேசிய மலேரியா ஒழிப்புப்பிரிவின் பணிப்பாளர் டொக்டர் ஹேமந்த ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.

சியம்பலாண்டுவ பகுதியிலுள்ள இருவர் மலேரியா காய்ச்சலுக்குள்ளானமை கடந்த வருடம் டிசம்பர் மாதம் கண்டறியப்பட்டது.

அவர்களில் ஒருவர் சியம்பலாண்டுவ, ஆதிமலை பகுதியிலுள்ள தனியார் சீனித் தொழிற்சாலையில் தொழில்புரியும் இந்தியப் பிரஜையாவார்.

அதே தொழிற்சாலையில் தொழில்புரியும் 45 வயதான, மீகொட பகுதியை சேர்ந்த மற்றுமொருவரும் அடையாளங் காணப்பட்டார்.

குறித்த தொழிற்சாலையில் தொழில்புரியும் இந்தியப் பிரஜையூடாக மலேரியா தொற்று ஏற்பட்டிருக்கக்கூடும் என வைத்தியர்கள் சந்தேகம் வௌியிட்டுனர்.

இதனை உறுதிசெய்வதற்காக இவர்களின் குருதி மாதிரிகள் சிங்கப்பூரிலுள்ள ஆய்வுகூடத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டன.

இந்தநிலையில், குறித்த இருவரின் குருதி மாதிரிகளில் ஒரேமாதிரியான தொற்றுக்கிருமிகள் காணப்பட்டமை ஆய்வினூடாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

2012 ஆம் ஆண்டு நாட்டில் இறுதியாக மலேரியா காய்ச்சலால் பீடிக்கப்பட்டவர்கள் இனங்காணப்பட்டனர். இதனைத் தொடர்ந்து, 2016 ஆம் ஆண்டு இலங்கை மலேரியா ஒழிக்கப்பட்ட நாடாக உலக சுகாதார ஸ்தாபனத்தால் அறிவிக்கப்பட்டது.

இந்தநிலையில், தற்போது நாட்டில் மலேரியா காய்ச்சலால் பீடிக்கப்பட்டவர்கள் அடையாளம் காணும்பட்சத்தில், உலக சுகாதார ஸ்தாபனத்தால் வழங்கப்பட்ட அங்கீகாரம் இரத்தாகுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் கொழும்பு மற்றும் கேகாலை ஆகிய பகுதிகளில் மலேரியா நோயாளர்கள் இருவர் அடையாளங் காணப்பட்டுள்ளனர்.

எனினும், இவர்கள் இருவரும் வௌிநாட்டிற்கு சென்றிருந்தபோதே மலேரியா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக தேசிய மலேரியா ஒழிப்புப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.

Sharing is caring!