மீள அமுல்படுத்தவுள்ள விலைச் சூத்திரம்

எரிபொருள் விலைச் சூத்திரத்தை மீள அமுல்படுத்தவுள்ளதாக, நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

அமைச்சின் கடமைகளை சற்றுநேரத்திற்கு முன்னர் பொறுப்பேற்றபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, 4 மாதங்களுக்கான இடைக்கால கணக்கறிக்கைக்கு அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளதாகவும் நிதி அமைச்சர் இதன்போது கூறியுள்ளார்.

இந்த இடைக்கால கணக்கறிக்கையை பாராளுமன்றத்தில் நாளை சமர்ப்பிக்கவுள்ளதாகவும் நிதி அமைச்சர் மங்கள சமரவீர மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

2019 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தை சமர்ப்பிக்க முடியாது போனமையால், இடைக்கால கணக்கறிக்கை பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்படவுள்ளது. அதனூடாக நாட்டிற்கு முதல் 4 மாதங்களுக்குத் தேவையான நிதியை ஒதுக்கீடு செய்து கொள்வோம்.

எதிர்வரும் 31 ஆம் திகதிக்கு முன்னர் இடைக்கால கணக்கறிக்கையை நிறைவேற்றிக் கொள்ள முடியாதுபோனால், அரச அதிகாரிகள், ஓய்வூதிய பயனாளிகள் சமுர்த்தி பயனாளிகள் என யாருக்கும் ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் நிதி ஒதுக்க முடியாதுபோகும். நாளைய தினத்திற்குள் இந்த இடைக்கால கணக்கறிக்கையை பாராளுமன்றத்தில் நிறைவேற்றிக் கொள்வோம்.

இதன்பின்னர் ஜனவரி மாதம், 2019 ஆம் ஆண்டுக்கான முழுமையான வரவுசெலவு திட்டத்தை சமர்ப்பிக்க நாம் எதிர்பார்க்கின்றோம். எங்களுடைய விலை சூத்திரத்தினூடாக மஹிந்த ராஜபக்ஸவும் நன்மைகளை பெற்றுக்கொண்டார். விசேடமாக தற்போது உலக சந்தையில் எரிபொருள் விலை குறைவடைவதைத் தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு, சில நிவாரணங்களை வழங்கினார்.

நாங்கள் சமர்ப்பித்த விலை சூத்திரத்திற்கு அமையவே அந்த நிவாரணங்களும் வழங்கப்பட்டன. இந்த விடயம் தொடர்பில் கவனம் செலுத்தி நாளைய தினம் அது குறித்து விசேட அறிவிப்பொன்றை விடுக்கவுள்ளோம். விலை சூத்திரத்திற்கு அமைய, எரிபொருள் விலை அதிகரிக்கப்படுமா இல்லையா என்பது குறித்து தீர்மானிக்கப்படும்

என நிதி அமைச்சர் மங்கள சமரவீர குறிப்பிட்டுள்ளார்.

Sharing is caring!