முதலாம்கட்ட நடவடிக்கைகள் பூர்த்தியாகியுள்ளன

இலங்கையின் முதலாவது திட்டமிடப்பட்ட கொழும்பு துறைமுக நகரின் முதலாம்கட்ட நடவடிக்கைகள் பூர்த்தியாகியுள்ளன.

அதன்படி, கொழும்பு துறைமுக நகரின் இந்த புதிய மைல்கல்லை கொண்டாடும் நிகழ்வு பெருநகரமற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தலைமையில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்றது.

கொழும்பு துறைமுக நகரத் திட்டம் முன்னெடுக்கப்பட்டுவரும் பிரதேசத்திலிருந்து நான்காவது தூர்வாரும் கப்பலான ‘சின் லாய் லோங்’ விடைபெற்ற நிலையில், இதன்போது பிரியாவிடை வைபவமும் நடைபெற்றது.

குறித்த நிகழ்வில் சீனத் தூதுவர் செங் யுவான் மற்றும் கொழும்பு துறைமுக நகரின் முகாமைத்துவப் பணிப்பாளர் ஹவ்லியாங் சியாங் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

கடலிலிருந்து மீட்கப்பட வேண்டிய 269 ஹெக்டேயர் நிலப்பரப்பு தற்போது பூரணப்படுத்தப்பட்டுள்ள நிலையில், இலங்கையின் முதலாவது திட்டமிடப்பட்ட கொழும்பு துறைமுக நகர் தற்போது இரண்டாம் கட்ட நிலையை எட்டியுள்ளது.

புதிய நகர அபிவிருத்தியின் அடையாளமாக திகழும் கொழும்புத் துறைமுக நகரத்திற்கான ஆரம்ப முதலீடாக 1.4 பில்லியன் அமெரிக்க டொலர்களும், பூர்த்தியாகும் போது மொத்த முதலீடாக 15 பில்லியன் அமெரிக்க டொலர்களும் செலவிடப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

269 ஹெக்டெயர் பரப்பளவிலான கடல் அகழ்வு திட்டமான கொழும்புத் துறைமுக நகர கட்டுமாணப் பணிகள் பூர்த்தியாகியவுடன் வடிவமைப்பிலும் கட்டுமாணத்திலும் சிறந்த, முதல் தரத்தினைக் கொண்ட அலுவலகங்கள், மருத்தவ வசதிகள், கல்வி வசதிகள், ஒருங்கிணைந்த விடுதிகள், மரீனா சில்லறை வியாபார நிலையங்கள், ஹோட்டல்கள் மற்றும் அபிவிருத்தியடைந்த வாழ்க்கை முறை என்பன இந்த நிலப்பரப்பில் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Sharing is caring!