முதலாவது இலத்திரனியல் ரயில் மார்க்கம் கொழும்பு – கோட்டையிலிருந்து, கொட்டாவ – மாலபால்ல வரை

தூண்கள் மீது பயணிக்கும் முதலாவது இலத்திரனியல் ரயில் மார்க்கம் கொழும்பு – கோட்டையிலிருந்து, கொட்டாவ – மாலபால்ல வரை நிர்மாணிக்கப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

களனிவௌி ரயில் மார்க்கம் அமைந்துள்ள பகுதியினூடாக இது நிர்மாணிக்கப்படவுள்ளது.

குறித்த இலத்திரனியல் ரயில் மார்க்க திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி கிடைக்கப் பெற்றுள்ளதுடன், நிர்மாணப் பணிகள் 2022 இல் பூர்த்தியாகவுள்ளன.

இதற்கு ஆசிய அபிவிருத்தி வங்கியினால் ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இரண்டு பாதைகளை கொண்ட ரயில் மார்க்கத்தின் 5 நிமிடங்களுக்கு ஒரு தடவை ரயில்கள் பயணிக்கவுள்ளன.

முதற்கட்ட நிர்மாணப் பணிகளுக்காக குறித்த பகுதியில் உள்ள 1000 குடும்பங்கள் அகற்றப்பட்டு மாற்றிடங்களுக்கு அனுப்பப்படவுள்ளன.

இந்த இலத்திரனியல் ரயில் மார்க்கத்தின் இரண்டாம் கட்டம் கொட்டாவையிலிருந்து பாதுக்க வரையும் மூன்றாம் கட்டம் பாதுக்கையிலிருந்து அவிசாவளை வரையும் முன்னெடுக்கப்பட உள்ளதாக, ரயில்வே முகாமையாளர் டிலந்த பெர்ணான்டோ குறிப்பிடுகின்றார்.

ரயில் பயணிகளில் 10 வீதமானோர் இந்த ரயில் மார்க்கத்தை பயன்படுத்துகின்றனர்.

இலத்திரனியல் ரயில் நிறுவப்பட்டதன் பின்னர் குறித்த மார்க்கத்தின் மூலம் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கை 60 வீதமாக அதிகரிக்கும் என எதிர்பார்ப்பதாக ரயில்வே முகாமையாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

Sharing is caring!