முதல் அமைச்சரவையில் முக்கிய தீர்மானங்கள்

பாராளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்தை நிரூபிப்பதற்கும் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்வதற்கும் இரண்டு தெரிவுகள் இருக்கும் நிலையில், ஐக்கிய தேசியக் கட்சி கொழும்புக்கு ஆட்களை திரட்டிவந்து ஜனநாயக விரோதச் செயலில் ஈடுபடுவதாக அரசாங்கப் பேச்சாளர்களான அமைச்சர் மஹிந்த சமரசிங்கவும் கெஹெலிய ரம்புக்வெல்ல எம்.பியும் நேற்று விசனம் தெரிவித்தனர்.

மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகம் தொடர்பில் பேசும் பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர அரசாங்க சேவையாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்திருப்பது மனித உரிமையை மீறும் செயல் இல்லையா? என்றும் அவர்கள் கேள்வி எழுப்பினர்.இதேவேளை, ஜனாதிபதி பாராளுமன்றத்தை 16 ஆம் திகதிக்கு ஒத்தி வைத்திருப்பது பாரிய காலதாமதம் இல்லையென சுட்டிக்காட்டிய அரசாங்கப் பேச்சாளர்கள், 16 ஆம் திகதியன்று வைபவ ரீதியான

அங்குரார்ப்பணமே இடம்பெறுமென்றும் அதற்குப் பின்னர் ஐ.தே.க விரும்பினால் பெரும்பான்மை பலத்தை நிரூபிப்பதற்காக சபாநாயகரிடம் வாக்ெகடுப்புக்கு நாள் கோராலாமென்றும் கூறினர்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை பதவியிலிருந்து நீக்கியதும் புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷவை நியமித்ததும் சட்டத்துக்கும் அரசியலமைப்புக்கும் உட்பட்டது என்றும் அவர்கள் விளக்கமளித்தனர்.

“பிரதமரை பதவி நீக்கும் அதிகாரம் தொடர்பில் அரசியல் யாப்பில் சிங்கள மொழியில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளபோதும், ஆங்கில மொழிபெயர்ப்பில் தெளிவாக குறிப்பிடப்படவில்லை. முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் ஆங்கில மொழி அரசியலமைப்பை வைத்துக் கொண்டே பேசுகின்றார். ஆனால், உண்மையில் சிங்கள வடிவமே செல்லுபடியாகும்,” என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தொடர்ந்தும் நல்லிணக்கத்துக்காக செயற்படுவதுடன் மனித உரிமைகளைப் பாதுகாப்பேன் என வெளிநாட்டு தூதுவர்களிடம் வாக்குறுதியளித்திருப்பதாகவும் புதிய நிதி அமைச்சரான மஹிந்த ராஜபக்ஷ 2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் வேலைகளை ஆரம்பித்து விட்டதாகவும் அரசாங்கப் பேச்சாளர்கள் நேற்று ஊடகவியலாளர்களிடம் கூறினர்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட 12 அமைச்சர்களுடனான முதலாவது அமைச்சரவைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதனையடுத்து அமைச்சரவை முடிவுகள் தொடர்பில் விளக்கமளிக்கும் செய்தியாளர் மாநாடு நேற்று தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. இதன்போது முன்னாள் பிரதமர் பதவி நீக்கப்பட்டமை மற்றும் புதிய பிரதமரின் பதவி நியமனம் மற்றும் கொழும்பில் நேற்று நடந்த ஆர்ப்பாட்டப் பேரணி தொடர்பில் ஊடகவியலாளர்களால் முன்வைக்கப்பட்ட சரமாரியான கேள்விகளுக்கு பதிலளிக்கும்போதே அரசாங்கப் பேச்சாளர்களான அமைச்சர் சமரசிங்கவும் ரம்புக்வெல்ல எம்.பியும் மேற்கண்டவாறு விளக்கமளித்தனர்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரசியலமைப்பின் 48(1) சரத்தில் சிங்களத்தில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டதற்கு அமைய, தனக்குள்ள முழுமையான அதிகாரத்தைப் பயன்படுத்தியே முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை பதவி நீக்கிவிட்டு புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷவை நியமனம் செய்துள்ளார். அனைத்தும் சட்டத்துக்கும் அரசியலமைப்புக்கும் உட்பட்ட விடயங்கள் ஆதலால் இதில் முரண்பாடு எதுவும் இல்லையென்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.

அவர்கள் இது தொடர்பில் மேலும் விளக்கமளித்ததாவது-,

கடந்த வெள்ளிக்கிழமை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியினர் அரசாங்கத்திலிருந்து விலகியதும் இயல்பாகவே 43 பேரைக் கொண்ட அமைச்சரவை கலைந்து விட்டது. அரசியலமைப்புக்கு அமைய அமைச்சரவைக் கலைவதுடனேயே பிரதமரது பதவியும் இரத்தாகின்றது. இதனையடுத்து பாராளுமன்றத்தில் பெரும்பான்மை நம்பிக்ைகக்குரியவரென ஜனாதிபதியால் நம்பப்படும் ஒருவரை அழைத்து பிரதமர் பதவியை வழங்குவதற்கு ஜனாதிபதிக்கு அதிகாரம் இருக்கிறது.

அதற்கமையவே ஜனாதிபதி பெரும்பான்மை நம்பிக்ைகயுள்ளவரான மஹிந்த ராஜாக்ஷவை அழைத்து பிரதமர் பதவியை வழங்கியுள்ளார். அரசியலமைப்பில் இதற்கு ‘பெரும்பான்மை’ வேண்டும் என்று குறிப்பிடப்படவில்லை. மாறாக பெரும்பான்மை உறுப்பினர்களின் நம்பிக்ைகக்குரியவர் என ‘நம்பப்படும்’ ஒருவரே நியமிக்கப்பட வேண்டும் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது.எனவே இதற்காக பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை. மஹிந்த ராஜபக்ஷவே அனைவரதும் நம்பிக்ைகக்குரியவர் என்பது எம் எல்லோருக்கும் தெரிந்த விடயம். அத்துடன் ஜனாதிபதி பழைய பிரதமரை நீக்கியதையும் புதிய பிரதமரை நியமித்ததையும் அரசியலமைப்பின் 46 (2) சரத்துக்கமைய வர்த்தமானியில் பிரசுரித்துள்ளார். எனவே இச்செயற்பாடுகள் யாவும் சட்டப்பூர்வமானவை.ஜனாதிபதி இது தொடர்பில் வெளிநாட்டு தூதுவர்களுக்கும் விளக்கமளித்துள்ளார்.

ஜனாதிபதி- வெளிநாட்டு

தூதுவர்களுடனான சந்திப்பு

ஜனாதிபதி வெளிநாட்டு தூதுவர்களை சந்தித்து நாட்டின் தற்போதைய அரசியல் நிலவரம் தொடர்பில் விளக்கமளித்துள்ளார். இதன்போது அனைத்து செயற்பாடுகளும் சட்டத்துக்கும் அரசியலமைப்புக்கும் உட்பட்டதாகவே முன்னெடுக்கப்பட்டிருப்பதனை அவர் உறுதி செய்துள்ளார்.

மேலும் நாட்டில் நல்லிணக்கச் செயற்பாடுகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுமென்றும் மனித உரிமைகள் பாதுகாக்கப்படுமென்றும் அவர் உறுதியளித்தார். தனது ஆட்சிக் காலத்தில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நாட்டில் பாரிய கலவரங்கள் இடம்பெறவில்லையென சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, எதிர்காலத்திலும் நாட்டின் பாதுகாப்பு நிலைமை உறுதி செய்யப்படுமென்றும் தெரிவித்தார். அத்துடன் நிறுவனங்களில் தொழிற்சங்கங்களால் இடம்பெற்ற மோதல்களைத் தானும் பிரதமரும் இணைந்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததாகவும் அவர் தெரிவித்தார். எனவே உல்லாசப் பயணிகள் அச்சமின்றி நாட்டுக்கு வரமுடியுமென்றும் அவர் தூதுவர்களிடம் கூறினார்.

2015 ஆம் ஆண்டில் 41 ஆசனங்களை மட்டுமே கொண்டிருந்த ஐ.தே.க தலைவரைப் பிரதமராக நான் தெரிவு செய்தபோது எவரும் அரசியலமைப்பு பற்றி கதைக்க முன்வரவில்லையென்றும் ஜனாதிபதி இதன்போது நினைவு கூர்ந்தார்.

சபாநாயகருடனான கட்சி

உறுப்பினர்களின் சந்திப்பு

பாராளுமன்றத்தை கூட்டுமாறு 126 எம்.பிக்கள் கையொப்பமிட்டு சபாநாயரிடம் கையளித்துள்ளனர். இதுதொடர்பில் சபாநாயகர் கட்சிகளுடன் உத்தியோகப்பற்றற்ற சந்திப்பொன்றை நடத்தினார். அதில் நாம் கலந்துகொண்டு 16 ஆம் திகதி வரை பாராளுமன்றத்தை ஒத்தி வைத்திருப்பது பாரிய காலதாமதம் இல்லையென்று அவருக்கு விளக்கமளித்தோம்.

எதிர்வரும் 05 ஆம் திகதி பாராளுமன்றத்தை கூட்டுவதாகத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை. இந்நிலையில் வார இறுதி நாட்களை விடுத்து பார்க்கும்போது சுமார் 10 நாட்களே கூடுதலாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதில் தவறு இல்லை. புதிய நிதியமைச்சர் 2019 இற்கான வரவு செலவைத் திட்டமிட ஆரம்பித்துள்ளார்.

பாராளுமன்றத்தை ஒத்திவைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு உள்ளது. அத்துடன் ஜனாதிபதி செய்தவை யாவும் சட்டத்துக்கும் அரசியலமைப்புக்கும் உட்பட்டவையென்றும் நாம் சபாநாயகருக்கு விளக்கமளித்தோம் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

Sharing is caring!