மேன்முறையீடு…மஹிந்தவின் பிரதமர் பதவியை நீக்கிய உத்தரவுக்கு எதிராக மேன்முறையீடு

மஹிந்த ராஜபக்ஸ பிரதமராக செயற்படுவதைத் தடுக்கும் வகையில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை இரத்து செய்யுமாறு தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீடு இன்று உயர் நீதிமன்றத்தில் மீண்டும் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

மஹிந்த ராஜபக்ஸவின் பிரதமர் பதவி மற்றும் அமைச்சரவை பதவிகளைத் தடுக்கும் வகையில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை இரத்து செய்யுமாறு கோரி இந்த மேன்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

உயர் நீதிமன்ற நீதியரசர்களான புவனேக்க அலுவிஹாரே மற்றும் மூர்து பெர்னாண்டோ ஆகியோர் இந்த மனுவை இன்று பரிசீலனைக்கு எடுத்துக்கொண்டனர்.

மஹிந்த ராஜபக்ஸ உள்ளிட்டவர்களுக்கு எதிராக இடைக்காலத் தடை விதிப்பதற்கு காரணமான மேன்முறையீட்டு நீதிமன்ற மனுவை மீளப்பெறுவதற்கு தமது தரப்பு தயார் என உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மேன்முறையீட்டு மனுவின் பிரதிவாதிகள் இன்று அறிவித்துள்ளனர்.

மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்த பாராளுமன்ற உறுப்பினர்களிடம் கையொப்பங்களைப் பெற வேண்டியுள்ளதால், அதற்கு கால அவகாசம் தேவைப்படுவதாகவும் அவர்கள் அறிவித்தனர்.

மேன்முறையீட்டு நீதிமன்ற மனு மீளப்பெறப்படும் பட்சத்தில், மஹிந்த ராஜபக்ஸ உள்ளிட்ட முன்னாள் அமைச்சரவை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மேன்முறையீட்டு மனுவையும் மீளப்பெறுவதற்கு தயார் என சட்டத்தரணிகள் மன்றில் அறிவித்தனர்.

இதேவேளை, ரணில் விக்ரமசிங்க பங்குதாரராக செயற்படுவதாகக் கூறப்படுகின்ற நிறுவனமொன்றுக்கு அரச நிறுவனங்களுடன் கொடுக்கல் வாங்கலில் ஈடுபடுவதன் மூலம் வருமானம் கிடைத்துள்ளதால் அவரது பாராளுமன்ற ஆசனத்தை இரத்து செய்யுமாறு தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவொன்றும் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரிக்கப்படுகின்றது.

Sharing is caring!