மேன்முறையீட்டு மனு  இன்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது

பிரதமர் உள்ளிட்ட அமைச்சரவையின் நடவடிக்கைகளை தடுக்கும் வகையில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்ட இடைக்கால தடையுத்தரவிற்கு எதிராக, உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனு  இன்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.

ஈவா வனசுந்தர, விஜித் மலல்கொட, புவனேக அலுவிஹாரே ஆகிய மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம் இந்த மேன்முறையீட்டு மனுவை விசாரிக்கவுள்ளது.

மஹிந்த ராஜபக்ஸ பிரதமராக செயற்படுவதைத் தடுத்தும், அமைச்சரவை செயற்படுவதை தடுக்கும் வகையிலும் கடந்த 3 ஆம் திகதி மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்கால தடையுத்தரவொன்றை பிறப்பித்திருந்தது.

இந்த இடைக்கால தடையுத்தரவுக்கு எதிராக மஹிந்த ராஜபக்ஸ உள்ளிட்ட 49 பேர் தாக்கல் செய்திருந்த மேன்முறையீட்டு மனு இன்று உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

இடைக்கால தடையுத்தரவிற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனுவை, ஐவரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட சிலர் நகர்த்தல் பத்திரத்தை தாக்கல் செய்திருந்தனர்.

எனினும் இன்றைய தினம் மூவரடங்கிய நீதியரசர் குழாம் முன்னிலையிலேயே இந்த வழக்கு பரீசிலனைக்கு உட்படுத்தப்படும் என நியூஸ்ஃபெஸ்ட்டின் நீதிமன்ற செய்தியாளர் தெரிவித்தார்.

Sharing is caring!