மேன்முறையீட்டு மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது

பிரதமர் உள்ளிட்ட அமைச்சரவையின் நடவடிக்கைகளை தடுக்கும் வகையில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்ட இடைக்கால தடையுத்தரவிற்கு எதிராக, உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.

ஈவா வனசுந்தர, விஜித் மலல்கொட, புவனேக அலுவிஹாரே ஆகிய மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இந்த மேன்முறையீட்டு மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.

பிரதமர் உள்ளிட்ட அமைச்சரவையின் நடவடிக்கைகளை தடுக்கும் வகையில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்ட இடைக்கால தடையுத்தரவிற்கு எதிராக, உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனு  இன்று முற்பகல் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

நாட்டில் தற்போது அமைச்சரவை ஒன்று செயற்படாமையினால் குறித்த  மேன்முறையீட்டு மனு இன்று விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என ஜனாதிபதி சட்டத்தரணி ரொ​மேஷ் டி சில்வா மன்றில் தெரிவித்தார்.

இதேவேளை, நாட்டிற்கு முக்கியத்துவம் வாய்ந்த விடயமாக இது இருப்பதால், ஐவர் அடங்கிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என ஜனாதிபதி சட்டத்தரணி கனக ஈஸ்வரன் இங்கு சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனு குறித்த அறிவித்தல் தமது கட்சிக்கார்களுக்கு இதுவரை கிடைக்கவில்லை என ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

அத்துடன், இந்த விடயத்துடன் பாராளுமன்ற சிறப்புரிமைகள் தொடர்புபட்டுள்ளதால் பிரதம நீதியரசர் முழுமையான நீதியரசர்கள் குழாமை நியமிக்க வேண்டும் என ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் உயர்நீதிமன்றில் கோரிக்கை விடுத்திருந்தார்.

இதன்போது, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் மேன்முறையீட்டு வழக்கின் தற்போதைய கட்டத்தில் முழுமையான நீதியரசர்கள் குழாம் அவசியமில்லை என மனுதாரர் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, வழக்கை ஒத்திவைக்காமல் இன்றைய தினமே விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர்நீதிமன்றம் தீர்மானித்தது.

மஹிந்த ராஜபக்ஸ பிரதமராக செயற்படுவதைத் தடுத்தும், அமைச்சரவை செயற்படுவதை தடுக்கும் வகையிலும் கடந்த 3 ஆம் திகதி மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்கால தடையுத்தரவொன்றை பிறப்பித்திருந்தது.

இந்த இடைக்கால தடையுத்தரவுக்கு எதிராக மஹிந்த ராஜபக்ஸ உள்ளிட்ட 49 பேர் மேன்முறையீட்டு மனுவை தாக்கல் செய்திருந்தனர்.

இடைக்கால தடையுத்தரவிற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனுவை, ஐவரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட சிலர் நகர்த்தல் பத்திரத்தை தாக்கல் செய்திருந்தனர்.

இதேவேளை, உயர்நீதிமன்றம் மற்றும் அதனை சூழவுள்ள பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்காக பொலிஸ் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

Sharing is caring!