மைத்திரிபால மோடி சந்திப்பு

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று நேபாளத்தில் இன்று நடைபெற்றது.

BIMSTEC மாநாட்டில் இருநாட்டுத் தலைவர்களும் பங்கேற்ற சந்தர்ப்பத்திலேயே இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

வங்காள விரிகுடாவை அண்மித்த நாடுகளின் தொழில்நுட்பம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பை அடிப்படையாகக் கொண்ட 4 ஆவது BIMSTEC மாநாடு (Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Cooperation) நேபாளத் தலைநகர் காத்மண்டுவில் இன்று ஆரம்பமானது.

“சமாதானம், சுபீட்சம் மற்றும் பேண்தகு தன்மைவாய்ந்த வங்காள விரிகுடாவை நோக்கி” என்ற தொனிப்பொருளில் இம்முறை BIMSTEC மாநாடு இடம்பெறுகின்றது.

இலங்கை, இந்தியா, மியன்மார், பங்களாதேஷ், பூட்டான், நேபாளம், தாய்லாந்து ஆகிய 7 நாடுகள் இதில் பங்கேற்கின்றன.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு இடையிலான சந்திப்பில்,
ஜனநாயகம் மற்றும் சுதந்திரத்தை உறுதிப்படுத்துவது தொடர்பான ஜனாதிபதியின் அர்ப்பணிப்பிற்கு இந்தியப் பிரதமர் பாராட்டுத் தெரிவித்துள்ளார்.

BIMSTEC மாநாட்டின் முடிவில் அதன் தலைமைத்துவம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு வழங்கப்படவுள்ளது.

அனுபவமிக்க தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான BIMSTEC அமைப்பு மிகவும் பலம் வாய்ந்ததாக காணப்படும் என இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

இதேவேளை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மியன்மார் ஜனாதிபதி வின் மயின்ட்டை (Win Myint ) சந்தித்துள்ளார்.

மியன்மார் மற்றும் இலங்கைக்கு இடையிலான இருதரப்பு உறவுகளை தொடர்ந்தும் பலப்படுத்துவது தொடர்பில், இரு நாட்டுத்தலைவர்களும் கவனம் செலுத்தியதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Sharing is caring!