மைத்திரி வரும் போது வடமராட்சியில் போராட்டம்

யாழ். வடமராட்சி கடற்பரப்பில் கடலட்டை பிடித்த 81பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு சில மணிநேரங்களிலேயே விடுவிக்கப்பட்டனர்.

இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் 22ஆம் திகதி மயிலிட்டித்துறைமுக அபிவிருத்திக்கு அடிக்கல் நடும் நிகழ்வுக்கு வருகைதரும்போது போராட்டம் நடத்தவுள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

வடமராட்சி கடற்பரப்பில் நேற்றுமுன்தினம் இரவு கடலட்டை பிடித்த 81 மீனவர்கள் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டனர். அவர்களின் 27 படகுகளும் கைப்பற்றப்பட்டன.

பருத்தித்துறைமுனையை அண்மித்த பகுதியிலுள்ள கடற்படையினரின் முகாமில் மீனவர்களும், அவர்களது படகுகளும் தடுத்து வைக்கப்பட்டிருந்தன.

இரவில் கடலட்டை பிடிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்று நீரியல்வளத் திணைக்களத்தினாரால் தெரியப்படுத்தப்பட்டதையடுத்து மீனவர்களும், படகுகளும் விடுவிக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பில் கொதிப்படைந்துள்ள வடமராட்சி மீனவர்கள் தெரிவித்ததாவது,

வடமராட்சி கிழக்கில் பகலில் மட்டுமே கடலட்டை பிடிக்க முடியும் என்று அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் இரவு கடலட்டை பிடிப்பதற்கு இரகசியமாக அனுமதி வழங்கப்பட்டுள்ளமை தற்போது உறுதியாகியுள்ளது.

கைதுசெய்யப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்டமையை எதிர்த்து ஜனாதிபதியின் வருகையின் போது ஆர்ப்பாட்டம் நடத்த எண்ணியுள்ளோம்.

வடமராட்சி கிழக்கில் அனுமதி இன்றி அரச நிலங்களில் அடாத்தாக வாடி அமைத்துத் தங்கி நின்று 400க்கும் அதிகமான படகுகள் கடலட்டை பிடிப்பில் ஈடுபடுகின்றன.

தங்கி நிற்பவர்களுக்கு கழிப்பறை வசதிகள் கூட இல்லை. அந்தப் பிரதேசத்தையை அசுத்தம் செய்கின்றனர். அங்கேயே அட்டைகளையும் உலர்த்தி ஏற்றுமதி செய்கின்றனர்.

உள்ளூர் மீனவர்கள் பாதிக்கப்படுகின்றனர் என்பதைச் சுட்டிக்காட்டியபோது கரையில் இருந்து 5 கிலோ மீற்றர் தூரத்திலேயே கடலட்டை பிடிப்பில் ஈடுபடுவர், பகலில் மட்டுமே தொழில் செய்வர் என்று என்று எமக்குத் தெரிவிக்கப்பட்டது.

பருத்தித்துறையை அண்டிய பகுதியில் கடல் அட்டை பிடிப்பில் ஈடுபட்டிருந்த சமயம் அதிகாலையில் 27 படகுகளைக் கடற்படையினர் கைப்பற்றியிருந்தனர். ஒவ்வொரு படகிலும் மூவர் தொழிலில் ஈடுபட்டிருந்தனர்.

பிடிக்கப்பட்ட அனைவரும் இரவுவேளை தொழிலில் ஈடுபட்டமையால் நீதிமன்றில் நிறுத்தப்படுவர் என்று எதிர்பார்த்தோம்.

ஏனெனில் யாழ்ப்பாண மாவட்டத்தில் தங்கி நின்று கடல் அட்டை பிடிப்பவர்களிடம் இரவுத் தொழிலிற்கான அனுமதிகள் இதுவரை கிடையாது.

ஆனால், அவர்கள் அனுமதி பெற்றுள்ளனர் என்று கடற்படையினர் தெரிவித்தனர். அப்படியானால் எவருக்குமே தெரியாது கடந்த ஒரு மாத காலத்துக்குள் இவ்வாறான இரவு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இரவு அனுமதி வழங்கப்பட்டமை தொடர்பில் எமது மாவட்ட நீரியல்வளத்துறை திணைக்களம் கூட உள்ளூர் மீனவ சங்கங்கத்துக்குத் தெரியப்படுத்தவில்லை.

இவ்வாறு கடல் அட்டை பிடிப்பவர்களுக்கு திணைக்களம் இரகசியமாக உதவுகின்றது என்ற குற்றச்சாட்டை இறுதியாக யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் நாம் சுட்டிக் காட்டியிருந்தோம்.

அதற்குப் பதிலளித்த திணைக்கள அதிகாரி உள்ளூர் மீனவர்களில் சிலர் இரகசியமாக நிலத்தை வழங்கினர், இன்னும் சில சங்கம் அனுமதியை வழங்கியுள்ளது என்று எம்மீது பழியைப் போட்டனர்.

தற்போது இரவு நேரத்திலும் கடல் அட்டை பிடிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தால் அதனை ஏன் மீனவ சமாசத்திற்கு தெரியப்படுத்தவில்லை.

குறைந்த பட்சம் பிரதேச செயலர் அல்லது மாவட்ட செயலருக்குக் கூட திணைக்களம் தெரிவிக்கவில்லை. அதிகாரிகள் தமது கடமை முடிந்தால் சரி, மீனவன் எப்படி அழிந்தால் என்ன என்ற மனநிலையிலேயே பணியாற்றுவது தெட்டத்தெளிவாகின்றது.

இவ்வாறான ஓர் திணைக்களமும், அதிகாரிகளும் எமக்கும் தேவைதானா என்ற சந்தேகமும் எழுகின்றது” என்று மீனவர்கள் தெரிவித்தனர்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் 22ஆம் திகதி மயிலிட்டித் துறைமுக அபிவிருத்தியை ஆரம்பிக்க வரும் சமயம் மீனவர் கூட்டுறவுச் சங்கச் சமாசங்கள் ஒன்றிணைந்து எதிர்ப்பை வெளிக்காட்டவுள்ளன.

நாளை திங்கட் கிழமை மீனவர் சங்க சமாசப் பிரதிநிதிகள் ஒன்றுகூடி இது தொடர்பான இறுதி முடிவை எடுக்கவுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டது

 

Sharing is caring!